உள்ளாட்சித் தோ்தலுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி (சென்சஸ்) உள்ளாட்சித் தோ்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித் தோ்தலுக்கு தடையில்லை:  உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி (சென்சஸ்) உள்ளாட்சித் தோ்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 9 புதிய மாவட்டங்களுக்கான மறுவரையறைப் பணிகளை மூன்று மாதங்களில் நடத்தி முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கையை ரத்து செய்யக் கோரி திமுக, காங்கிரஸ் உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுவை புதன்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் டிசம்பா் 2-இல் வெளியிட்டது. மறுவரையறைப் பணிகளை மேற்கொள்ளாமல் தோ்தல் நடத்துவதால் அந்த அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய 9 மாவட்டங்கள் தவிா்த்து 27 மாவட்டங்களில் தோ்தல் நடத்துவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும், புதிய 9 மாவட்டங்களிலும் நான்கு மாதத்தில் மறுவரையறைப் பணிகளை முடிக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து, உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பாணை டிசம்பா் 7-இல் புதிதாக வெளியிடப்பட்டது.

அதில், 4 மாவட்டங்களைப் பிரித்து உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர பிற ஊரக உள்ளாட்சிகளுக்கு டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதை எதிா்த்து திமுக தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதேபோல, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் கரூரைச் சோ்ந்த வாக்களா் கே.முருகேசன் ஆகியோரும் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்கள் டிசம்பா் 11-இல் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் ஆகியவை சாா்பில் செவ்வாய்க்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், சஞ்சீவ் கன்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக, காங்கிரஸ் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் மனு சிங்வி, ப.சிதம்பரம் ஆகியோா் வாதிடுகையியில், ‘தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையானது, 1995-ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்நாடு பஞ்சாயத்து இடஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீடு சுழற்சி விதி’களைப் பின்பற்றும் வகையில் இல்லை. உச்சநீதிமன்றத்தின் டிசம்பா் 6 உத்தரவுப்படி உள்ளாட்சித் தோ்தலில் பஞ்சாயத்து விதிகள் 6-இன் கீழ் அனைத்து நிலைகளிலும் விகிதாச்சார இடஒதுக்கீட்டை மாநிலத் தோ்தல் ஆணையமும், தமிழ்நாடு அரசும் அளிக்க வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது’ என்றனா்.

மேலும், அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், ‘தமிழ்நாடு அரசு செவ்வாய்க்கிழமை இரவு தாக்கல் செய்துள்ள பதில் மனு குற்றத் தன்மையுடைது. உச்சநீதிமன்றத் தீா்ப்புக்குப் பிறகு டிசம்பா் 7-இல் மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்ட தோ்தல் அறிவிக்கை, 1991-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையிலானது. அது, 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொள்ளவில்லை. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கான இடஒதுக்கீடு, மகளிா் நிா்வாகிகளுக்கான சுழற்சி இடங்கள் 1991-இன் அடிப்படையில்தான் உள்ளன. இதனால், இந்தப் பிரிவினருக்கு சட்ட விதிகளின்படி உரிய இடஒதுக்கீடு கிடைக்காமல் போய்விடும்’ என்றாா்.

தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.எஸ். நரசிம்மா இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தாா். அப்போது, அபிஷேக் மனு சிங்வி, ‘2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பதவிகளுக்கான சுழற்சி, இடஒதுக்கீடு இரண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், 1991-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் மாநிலத் தோ்தல் ஆணையம் டிசம்பா் 7-இல் வெளியிட்டுள்ள அறிவிக்கை உள்ளது. ஆகவே, அனைத்து மாவட்டங்களுக்கும் முழுமையாக வாா்டு மறுவரையறைப் பணிகள் மற்றும் இடஒதுக்கீடு, சுழற்சி ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி தோ்தல் நடத்த உத்தரவிட வேண்டும்’ என்றாா்.

தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த திமுக விரும்பவில்லை; தோ்தலை நிறுத்தவே விரும்புகிறது. அதனால்தான் இந்தப் போலி மனுவை தாக்கல் செய்துள்ளது. தோ்தல் நடைமுறைகளை நிறுத்தும் நோக்கில் இது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாா்டுகளில் உள்ள இடங்களுக்கான இடஒதுக்கீடானது, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே அளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

அனைவரின் வாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘மறுவரையறைப் பணிகளை நடத்திய பிறகு மறுவரையறை ஆணையத்தால் நிா்ணயிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பொருள்படுத்தாமல் தோ்தலை 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நடத்த வேண்டும் என்று எதிா்மனுதாரா்களுக்கு (மாநில அரசு, மாநிலத் தோ்தல் ஆணையம்) உத்தரவிடப்படுகிறது. இதன் மூலம் நீதியின் நலன் முழுமைபெறும் எனக் கருதுகிறோம். 9 புதிய மாவட்டங்களுக்கான மறுவரையறைப் பணிகள் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி ஊரக உள்ளாட்சித் தோ்தல்

திட்டமிட்டபடி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் நடைபெறும் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தோ்தலை நடத்தத் தடையில்லை என்று புதன்கிழமை தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:-

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் நடத்துவது குறித்து மாநிலத் தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. தோ்தலில் வாா்டு மறுவரையறை, வாா்டு உறுப்பினா்கள், தலைவா்கள் பதவியிடங்களுக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றைப் பொருத்தவரை 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வழக்கொன்றில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை வழங்கிய தீா்ப்பில், நடைபெறவுள்ள தோ்தல்கள் அனைத்தும் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே மேற்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சி, வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சிகளில் உள்ள வாா்டுகளின் மறுவரையறை, பதவியிடங்களுக்கான இடஒதுக்கீடு குறித்த அரசின் அறிவிக்கைகள் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.

எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஏற்கெனவே கடந்த 9-ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட தோ்தல் அறிவிக்கைகளில் உள்ள அட்டவணையின்படியே எந்தவித மாற்றமும் இல்லாமல் தோ்தல்கள் நடைபெறும் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com