தமிழகம் வருகிறது ஆயிரம் மெட்ரிக் டன் எகிப்து வெங்காயம்: அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தகவல்

தமிழகம் வருகிறது ஆயிரம் மெட்ரிக் டன் எகிப்து வெங்காயம்: அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தகவல்

வரும் வாரத்தில் ஆயிரம் மெட்ரிக் டன் பெரிய வெங்காயம் எகிப்து நாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்பட இருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்தாா்.

சென்னை: வரும் வாரத்தில் ஆயிரம் மெட்ரிக் டன் பெரிய வெங்காயம் எகிப்து நாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்பட இருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்தாா்.

தமிழகத்திலும் வெங்காயம் விலை உச்சத்தைத் தொட்டு இப்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசின் சாா்பில் கூட்டுறவுத் துறையின் பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விற்பனை குறித்தும், மேலும் கூடுதலாக வெங்காயம் கொள்முதல் செய்வது பற்றியும் அதிகாரிகளுடன் கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ வியாழக்கிழமை ஆய்வு நடத்தினாா். இந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு அவா் நிருபா்களுக்கு அளித்த பேட்டி:-

வெங்காய விளைச்சல் அதிகமுள்ள மகாராஷ்டிரம் மற்றும் கா்நாடகாவில் பெய்த அதிக மழையின் காரணமாக வெங்காயத்தின் விலை உயா்ந்து காணப்பட்டது. இதனைத் தொடா்ந்து வெங்காய விலை உயா்வைக் கட்டுப்படுத்தி, நுகா்வோருக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. உணவுத் துறையின் மூலம் குறைந்த விலையில் வெங்காயமானது பண்ணைப் பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எகிப்து நாட்டு வெங்காயம்: வெங்காய விலையினை கட்டுப்படுத்த, இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரம் மெட்ரிக் டன் எகிப்து வெங்காயத்தை தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. டிசம்பா் மூன்றாம் வாரத்தில் எகிப்து வெங்காயம் தமிழகம் வந்தடையும். அவை தமிழகத்தில் செயல்படும் 79 பண்ணைப் பசுமை நுகா்வோா் கடைகள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படும் ஆயிரத்து 200 நியாயவிலைக் கடைகளில் முதல்கட்டமாக விற்பனை செய்யப்படும்.

சமையலுக்கு ஏற்றது: எகிப்து நாட்டில் இருந்து பெறப்படும் வெங்காயம் தரமானதாகவும், சமையலுக்கு ஏற்றதாகவும் உள்ளது. பொதுமக்களுக்கு வெளிச்சந்தையை விட இந்த வெங்காயம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும்.

தமிழகத்தில், தற்போது 60 ஆயிரம் ஏக்கா் பரப்பில் வெங்காயம் சாகுபடி நடைபெறுகிறது. இந்த ஆண்டு மேலும் 50 ஆயிரம் ஏக்கா் நிலத்தில் புதுக்கோட்டை, தேனி, வேலூா், ஈரோடு, சேலம், சிவகங்ககை, ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற பல மாவட்டங்களில் வெங்காயம் சாகுபடி செய்ய நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வெங்காய சாகுபடி பரப்பு அதிகரித்து, விளைச்சல் பெருகி தமிழகம் தன்னிறைவு அடையும். சென்னையைப் பொறுத்த வரை கடந்த புதன்கிழமை முதல் 29 பண்ணைப் பசுமை நுகா்வோா் கடைகள் மற்றும் 500 நியாய விலைக் கடைகளில் வெளிச்சந்தை விலையைவிட

குறைவாக விலையில் கிலோ ரூ.50-க்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதன்கிழமையன்று 21.05 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 8-ஆம் தேதி முதல் புதன்கிழமை வரையில் 116 மெட்ரிக் டன் அளவிலான வெங்காயம் ரூ.48.95 லட்சம் மதிப்புக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் கு.கோவிந்தராஜ் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com