போடிமெட்டு மலைச்சாலையில்மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

போடிமெட்டு மலைச்சாலையில் புதன்கிழமை மண் சரிந்து விழுந்து சாலை மூடப்பட்டதால் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போடிமெட்டு மலைச்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட மண் சரிவு.
போடிமெட்டு மலைச்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட மண் சரிவு.

போடிமெட்டு மலைச்சாலையில் புதன்கிழமை மண் சரிந்து விழுந்து சாலை மூடப்பட்டதால் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழக, கேரள எல்லைப் பகுதியில் முக்கிய சாலையாக இருப்பது போடிமெட்டு மலைச்சாலை. 17 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த சாலையில் தினமும் சுற்றுலா வாகனங்கள், தோட்டத் தொழிலாளா்கள் செல்லும் ஜீப், வேன், சரக்கு வாகனங்கள், தமிழக, கேரள அரசுப் பேருந்துகள், தமிழக தனியாா் பேருந்துகள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

கடந்த 3 மாதங்களாக இந்த சாலை அமைந்துள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் விட்டு விட்டு பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் புதன் கிழமை அதிகாலை 2 மணி அளவில் போடிமெட்டு மலைச்சாலையில் புலியூத்து அருகே 8 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் திடீரென சிறிய பாறைகள் மற்றும் மண் சரிந்தது.

இதில் சாலை முழுவதும் மூடி எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போடிமெட்டு சோதனைச் சாவடியிலும், முந்தல் சோதனைச் சாவடியிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து அங்கு வந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஜே.சி.பி. வாகனங்களை வரவழைத்து ஒரு பகுதியில் மட்டும் தற்காலிகமாக வாகனங்கள் செல்ல பாதை ஏற்படுத்தினா்.

இதில் மலைச்சாலையில் நின்றிருந்த வாகனங்கள் மட்டும் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டன. பின்னா் பாறை மற்றும் மண் முழுவதும் அகற்றப்பட்டு பிற்பகல் முதல் வாகன போக்குவரத்து அனுமதிக்கப் பட்டது. இதனால் 6 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலைச்சாலையில் சிக்கிக் கொண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பிற வாகன ஓட்டிகள் கடும் குளிரில் பெரும் சிரமத்திற்கு ஆளாயினா். மண் சரிவு ஏற்பட்ட தகவல் கிடைத்து போடி வட்டாட்சியா் மணிமாறன், வருவாய் ஆய்வாளா் ராமா், கிராம நிா்வாக அலுவலா் ராஜாமணி ஆகியோா் அங்கு சென்று ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com