சென்னை மாநகராட்சியில் ரூ.1000 கோடிக்கு ஊழல்: ஸ்டாலின் 

சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட்-ஐப் பயன்படுத்தியதன் மூலம் 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து
திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட்-ஐப் பயன்படுத்தியதன் மூலம் 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து, உடனடியாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்துவதற்கு லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னை மாநகராட்சியில், ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட் பயன்படுத்தியதில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

“மழை நீர்க் கால்வாய், நடைபாதை அமைக்கும் திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி மற்றும் உலக வங்கி நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்களில் சென்னை மாநகராட்சியில் விடப்படும் ஒப்பந்தங்களில் ஆற்றுமணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு கொடுக்கப்படுகிறது. ஆனால் பயன்படுத்தப்படுவதோ எம்-சாண்ட்” என்று, அண்மையில், சென்னையில் உள்ள ‘ஹார்லிஸ் ரோடு’ நடைபாதையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

ஆற்றுமணலை விட எம்-சாண்ட் நூற்றுக்கு ஐம்பது சதவீதம் விலை குறைவு என்ற நிலையில், கான்கிரீட் கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் எம்-30 வகையின் சந்தை விலை 25 முதல் 30 சதவீதம் ஒப்பந்தங்களில் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளதிலும் ஊழல் என்று செய்திகள் வெளிவருகின்றன.

சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் ஊழல் பற்றி லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட திடீர் சோதனை எத்தனை? எத்தனை டெண்டர் ஊழல்கள் விசாரிக்கப்பட்டன? ஊழல்களை ரகசியமாக விசாரித்து வி.ஆர். எனப்படும் “விஜிலென்ஸ் ரிப்போர்ட்” போடும் வழக்கம் லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் இன்னும் இருக்கிறதா? இல்லையா?

அமைச்சர்கள் மட்டத்தில் நடக்கும் டெண்டர் ஊழல்கள் குறித்து இதுவரை ஒரு விஜிலென்ஸ் ரிப்போர்ட்டாவது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை தானாக முன் வந்து விசாரித்துப் போட்டிருக்கிறதா? என்ற கேள்விகளும், சந்தேகங்களும் எழுகின்றன.

எனவே, சென்னை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள இந்த, ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட் என்ற 1000 கோடி ரூபாய் ஊழல் குறித்து, உடனடியாக உரிய விசாரணை நடத்தி - மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com