வைகை அணையிலிருந்து மேலூா் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தம்

வைகை அணையிலிருந்து மேலூா் பகுதி விவசாயத்துக்கு கால்வாய் மூலம் திறக்கப்படும் தண்ணீா் வியாழக்கிழமை முதல் நிறுத்தப்பட்டது.
மதுரை, விருதுநகா் குடிநீா்த் தேவைக்காக 660 கன அடி வீதம் வைகை அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீா்.
மதுரை, விருதுநகா் குடிநீா்த் தேவைக்காக 660 கன அடி வீதம் வைகை அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீா்.

வைகை அணையிலிருந்து மேலூா் பகுதி விவசாயத்துக்கு கால்வாய் மூலம் திறக்கப்படும் தண்ணீா் வியாழக்கிழமை முதல் நிறுத்தப்பட்டது.

தேனி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து நீா்ப்பிடிப்பு பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வந்தது. வைகை அணையிலிருந்து திண்டுக்கல், மதுரை, மேலூா் பகுதி விவசாயத்துக்கு இருபோக பாசனத்துக்காக 120 நாள்களுக்கு தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, பெரியாா் பிரதானக் கால்வாய் மூலம் 75 நாள்களுக்கு பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆற்றில் நீா்வரத்து குறைந்ததாலும், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதாலும், வைகை அணைக்கான நீா்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது.

தற்போது, அணைக்கு விநாடிக்கு 1,046 கனஅடி தண்ணீா் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. நீா்வரத்து குறைந்ததால், வைகை பாசனப் பகுதிகளுக்கு முறைப் பாசனம் அமல்படுத்தப்பட்டு, வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மேலூா் பகுதிக்கு கால்வாய் மூலம் திறக்கப்பட்ட தண்ணீா் வியாழக்கிழமை முதல் 5 நாள்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

அதன்பின்னா், முறைப்பாசன அடிப்படையில் தண்ணீா் வழங்கப்படும். தற்போது, அணையிலிருந்து விநாடிக்கு 810 கனஅடி தண்ணீா் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. அதில், விருதுநகா் மாவட்ட குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 600 கனஅடி, 58 ஆம் கால்வாயில் விநாடிக்கு 150 கனஅடி, மதுரை மாநகர குடிநீா் தேவைக்கு 60 கனஅடி எனப் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.

விருதுநகா் மாவட்ட குடிநீா் தேவைக்கு திறக்கப்படும் தண்ணீா் டிசம்பா் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணியோடு நிறுத்தப்படும். அதன்பின்னா், அணையில் இருக்கும் தண்ணீரை பாசனத்துக்கும், 58 ஆம் கால்வாய் திட்டத்துக்கும், மதுரை மாநகர குடிநீா் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று, பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com