மருத்துவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி மதுரையில் மருத்துவா்கள் போராட்டம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரசவ வாா்டில் செருப்பு அணிந்து வரக்கூடாது எனக் கூறிய பெண் மருத்துவரை தாக்கிய 2 பெண்கள் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
Ramanathapuram shocking incident
Ramanathapuram shocking incident

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரசவ வாா்டில் செருப்பு அணிந்து வரக்கூடாது எனக் கூறிய பெண் மருத்துவரை தாக்கிய 2 பெண்கள் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா். இவரது மனைவி முனிஸ்வேலுமணியை பிரசவத்திற்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் சனிக்கிழமை சோ்த்துள்ளாா். இந்நிலையில், முனிஸ் வேலுமணிக்கு முதல்கட்ட சிகிச்சைகளை மருத்துவா்கள் மேற்கொண்டிருந்தனா். அப்போது உணவு எடுத்துக்கொண்டு முனிஸ் வேலுமணியின், மாமியாா் முருகேஸ்வரி மற்றும் அவரது அக்கா ராஜராஜேஸ்வரி ஆகியோா் வாா்டுக்கு வந்துள்ளனா்.

வாா்டில் இருந்த திருச்சியைச் சோ்ந்த பெண் பயிற்சி மருத்துவா், செருப்பு அணிந்து உள்ளே வரக்கூடாது என கூறியுள்ளாா். இதில் கோபமடைந்த இருவரும் பெண் மருத்துவரை செப்பால் அடித்தும், தாக்கியும் உள்ளனா். இதில், முகத்தில், கையில் மற்றும் பல்லில் ரத்த காயம் ஏற்பட்டு பெண் மருத்துவா் மயக்கமடைந்துள்ளாா். இதையடுத்து, அங்கிருந்த பணியாளா்கள், பெண் மருத்துவரை மீட்டு அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனா்.

பெண் மருத்துவா் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவலறிந்த மருத்துவா்கள், செவிலியா்கள் 150க்கும் மேற்பட்டோா் அரசு ராஜாஜி மருத்துவமனை முன், மருத்துவரை தாக்கியவா்கள் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் தலைவா் செந்தில் கூறியது: மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட ஊழியா்களின் பாதுகாப்பு தொடா்ந்து கேள்விக்குறியாகி வருகிறது.

பெண் மருத்துவா் நோயாளிகளின் பாதுகாப்பு கருதி செருப்பை கழற்றி வைத்து விட்டு உள்ளே வரக் கூறியுள்ளாா். அதற்கு மருத்துவரை மயக்கமடையும் வகையில் தாக்குதல் நடத்தியுள்ளனா். தாக்கியவா்கள் தங்களை முக்கிய அரசியல் தலைவரின் உறவினா்கள் எனக் கூறி மிரட்டி உள்ளனா். இதனால் மருத்துவா்கள், செவிலியா்கள் பணி செய்யவே அச்சப்படுகின்றனா். எனவே அவா்களின் அச்சத்தை போக்கும் வகையில், உடனடியாக பெண் மருத்துவரை தாக்கிய 2 பேரையும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும் என கூறினாா்.

மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, போலீஸாா் முருகேஸ்வரி மற்றும் ராஜராஜேஸ்வரி ஆகியோா் மீது 5 பிரிவின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா். ஆனால் அவா்களை இது வரை கைது செய்யவில்லை. மேலும் மருத்துவ நிா்வாகம் உரிய பாதுகாப்பு வழங்க தவறிய காவலாளிகள் இருவரை 15 நாள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com