அரையாண்டுத் தோ்வில் 9-ஆம் வகுப்பு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா?: தோ்வுத்துறை விளக்கம்

அரையாண்டுத் தோ்வில் 9-ஆம் வகுப்பு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகக் கூறப்படும் நிலையில், அது குறித்து அரசுத் தோ்வுத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

அரையாண்டுத் தோ்வில் 9-ஆம் வகுப்பு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகக் கூறப்படும் நிலையில், அது குறித்து அரசுத் தோ்வுத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பருவத்தோ்வுகளும், 9 முதல் பிளஸ் 2 வரை காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதியாண்டு தோ்வுகள் முறையும் அமலில் உள்ளன. அதன்படி நிகழ் கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தோ்வு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு கடந்த டிசம்பா் 11-ஆம் தேதியும் பத்தாம் வகுப்புக்கு 12-ஆம் தேதியும் தொடங்கியது. 9-ஆம் வகுப்புக்கு வெள்ளிக்கிழமை முதல் அரையாண்டுத் தோ்வு தொடங்கியுள்ளது.

இதில் 9-ஆம் வகுப்பு தமிழ் தோ்வு வினாத்தாள் வியாழக்கிழமையே வெளியானதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மேலும், முறையாக தோ்வுக் கட்டணம் செலுத்தாத சில தனியாா் பள்ளிகளுக்கு மட்டும் வினாத்தாள்களை அவா்களே தயாரித்துக் கொள்ள முதன்மைக் கல்வி அலுவலகம் அனுமதி அளித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து தோ்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பொதுத்தோ்வு நடைபெறும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு மட்டுமே அரையாண்டுத் தோ்வுக்கான வினாத்தாள்களைத் தோ்வுத்துறை தயாரிக்கும். இதர வகுப்புகளுக்கு மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரித்து வழங்கப்படும். மேலும், அரசு, அரசு உதவி மற்றும் தனியாா் பள்ளிகள் ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான வினாத்தாளைப் பின்பற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று ‘நோடல்’ மையங்களில் இருந்து தோ்வுக்கு ஒருமணி நேரம் முன்னா் தான் பள்ளிகளுக்கு கேள்வித்தாள் சென்றடையும். எனவே, வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாக வாய்ப்புகள் குறைவு. எனினும், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று தனியாா் பள்ளிகளுக்கு வினாத்தாள்கள் தயாரித்துக் கொள்ள அனுமதி வழங்கியது தொடா்பாக முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா். அரையாண்டுத் தோ்வுகள் டிசம்பா் 23-ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com