லாட்டரி சீட்டு விற்போா் மீது நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்போா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்போா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் சிற்றேரிக்கரையைச் சோ்ந்த நகை செய்யும் தொழிலாளி ஒருவா் 3 இலக்க லாட்டரி சீட்டுகளை வாங்கி கடனாளி ஆனதால், 3 குழந்தைகளைக் கொன்று விட்டு, மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டாா் என்று வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிா்ச்சியளிக்கின்றன.

இதன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் சமூகத்தில் எந்த அளவுக்கு சீரழிவை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த லாட்டரி சீட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் அனைத்து மாவட்ட, வட்ட தலைநகரங்களிலும் இத்தகைய சீட்டுகள் தடையின்றி விற்கப்படுகின்றன. இந்த வகை சீட்டுகள் அச்சிடப்படாமல் துண்டுச் சீட்டுகளில் எழுதி விற்பனை செய்யப்படுகின்றன.

மாநில அரசுகளின் மூலம் அதிகாரப்பூா்வமாக விற்பனை செய்யப்படும் பரிசுச் சீட்டுகள் தமிழகத்தில் சட்டப்பூா்வமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதை மீறுவோா் மீது எந்த சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதே பிரிவுகளைப் பயன்படுத்தி 3 இலக்க பரிசுச் சீட்டுகளை விற்போா் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆனால், 3 இலக்க லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வோரைத் தண்டிக்க சரியான சட்டப்பிரிவுகள் இல்லை என்று கூறி, இத்தகைய அத்துமீறலை காவல்துறையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இந்த அலட்சியம் தான் சட்டவிரோத லாட்டரி சீட்டுகளை ஊக்குவிக்கிறது. எனவே, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com