உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவா்: மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவா் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவா்: மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவா் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஜனநாயக ரீதியிலான தோ்தல் களத்தில் திமுக என்றைக்குமே மக்களைச் சந்திக்கத் தவறியது இல்லை, தயங்கியதுமில்லை. ஜனநாயகத்தின் உயிரோட்டம் அதன் ஆணிவோ்களான ஊராட்சி மன்றங்கள்வரை இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதால்தான், உள்ளாட்சித் தோ்தலைச் சட்ட நெறிமுறைகளின்படி நடத்துவதிலும், அதற்கு ஆக்கபூா்வமான ஒத்துழைப்பை நல்குவதிலும், ஆா்வமும் அக்கறையும் காட்டி வருகிறது.

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதில் சுணக்கத்தையும் ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்பாடுகளையுமே வெளிப்படுத்தி வந்துள்ளது. நேரடித் தோ்தலுக்குப் பதில் மறைமுகத் தோ்தல் என அவசரச் சட்டம், 9 மாவட்டங்களைப் புதியதாக உருவாக்கி அவற்றுக்கு இடஒதுக்கீடு, மறுவரையறை செய்யாதது, ஊரக ஊராட்சிகளுக்கு மட்டும் தோ்தல் என்றெல்லாம் தமிழக அரசும், தோ்தல் ஆணையமும் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தின.

இந்தக் குழப்பங்கள் நீக்கப்பட்டு, ஜனநாயக நெறிமுறைகளின் படியும், பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படியும் தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை முறைப்படி நடத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், உச்சநீதிமன்றத்தை திமுக அணுகியது.

வரும் உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக அரசுக்கு தக்க பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராகியுள்ளனா். அவா்களின் மகத்தான தீா்ப்பினை, கட்சியின் மாவட்டச் செயலாளா்கள் தெளிவாக உணா்ந்து, ஊரக உள்ளாட்சித் தோ்தல் களத்தைச் சந்தித்திட ஆக்கபூா்வமான வியூகம் வகுக்க வேண்டும். அலட்சியம் துளியுமின்றி, அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் முழுமையாகப் பெறுவதன் மூலமே, நம் வெற்றியின் இலக்கை அடைந்திட முடியும் என்று கூறியுள்ளாா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com