நீதிபதிகள் குழு பேச்சுவார்த்தை: நாகூர் தர்ஹா அறங்காவலர்கள் சமரசம்

நாகூர் தர்ஹா அறங்காவலர்கள் இடையே உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி உள்பட 3 நீதிபதிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சமரசம் ஏற்பட்டது.

நாகூர் தர்ஹா அறங்காவலர்கள் இடையே உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி உள்பட 3 நீதிபதிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சமரசம் ஏற்பட்டது.
 நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்ஹா மிகவும் பழைமை வாய்ந்தது. இங்கு பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களும் வழிபாடு நடத்தி வந்தனர். இந்த தர்ஹாவை 8 அறங்காவலர்கள் நிர்வகித்து வந்தனர். இந்த அறங்காவலர்கள் நியமனம் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெறும். இந்த நிலையில் 8-ஆவது அறங்காவலராக இருந்த வாஞ்சூர் பக்கிர் இறந்ததைத் தொடர்ந்து கமீல் சாஹிப் என்பவர் தன்னை அறங்காவலராக நியமிக்க உரிமை கோரினார்.
 இந்தப் பிரச்னை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, அக்பர் அலி ஆகியோர் அடங்கிய சமரசக் குழுவை அமைத்து இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை சமரசம் செய்ய உத்தரவிட்டிருந்தது.
 இந்த சமரசக் குழு அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 8-வது அறங்காவலராக கமீல் சாஹிப்பை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சமரசக் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த வழக்கில் இரண்டு தரப்புகளுக்காக ஆஜரான வழக்குரைஞர்கள் காஜா மொய்தீன் ஹிஸ்தி, ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆகியோர் தங்களது கட்சிக்காரர்களிடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து சமரசம் செய்த நீதிபதிகள் குழு மற்றும் இரண்டு தரப்பு வழக்குரைஞர்களுக்கும் நீதிபதி பாராட்டுத் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டு விட்டதால், உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து வைத்தார்.
 மேலும் சமரச பேச்சுவார்த்தை நடத்திய நீதிபதிகள் குழுவின் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை அறங்காவலர்கள் அனைவரும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். இதே பிரச்னைகளை மீண்டும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லக்கூடாது என கருத்து தெரிவித்தார்.
 ஆண்டுதோறும் இந்த தர்ஹாவில் நடைபெறும் புகழ்பெற்ற சந்தனக்கூடு விழாவின்போது ஏதாவது காரணத்துக்காக உயர் நீதிமன்றத்தில் அறங்காவலர்கள் வழக்குத் தொடர்வது வழக்கம். தற்போது அறங்காவலர்களுக்கு இடையே சமரசமும், ஒற்றுமையும் ஏற்பட்டு விட்டதால் வரும் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற உள்ள சந்தனக்கூடு திருவிழாவை அனைவரும் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் அனைவரது பங்களிப்புடன் சிறப்பாக கொண்டாட வாழ்த்துவதாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com