அதிகரிக்கும் தற்கொலைகள்...

விஞ்ஞான வளர்ச்சி ஒருபுறம் பயனுள்ளதாக அமைந்தாலும், மறுபுறம் உயிர் சார்ந்தவற்றை அழிக்கும் ஒரு சக்தியாகவே மாறி வருகிறது. இதனால் மனிதர்கள் பலவீனமடைந்து தன்னைத்தானே அழித்துக் கொள்ளும்
 அதிகரிக்கும் தற்கொலைகள்...

நாமக்கல்: விஞ்ஞான வளர்ச்சி ஒருபுறம் பயனுள்ளதாக அமைந்தாலும், மறுபுறம் உயிர் சார்ந்தவற்றை அழிக்கும் ஒரு சக்தியாகவே மாறி வருகிறது. இதனால் மனிதர்கள் பலவீனமடைந்து தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நிலைக்கு ஆளாகின்றனர். எதையும் எதிர்கொள்ளும் துணிவு மக்களிடத்தில் குறைந்து வருகிறது. இதனைத் தடுக்க முடியாது என்றபோதும், விழிப்புணர்வை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்கூட.
 உலகம் எனது கைகளிலே என்றபடி, இருந்த இடத்தில் இருந்தவாறு நல்லவற்றையும், கெட்டவற்றையும் மக்கள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். சிலருக்கு அது ஆதாயமாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளது. பலருக்கு அதுவே அழிவுக்கான வழிகோலாக மாறிவிடுகிறது. தவறான உறவு முறை, எளிதில் முன்னேறிவிடலாம் என்ற ஆசை, ஏமாற்றுவோரை எளிதாக நம்புவதற்கான வாய்ப்பு போன்றவை ஏற்படுகின்றன. இதனை எதிர்கொள்ள முடியாமல், இறுதியில் தன்னுயிரையே பலர் மாய்த்துக் கொள்ளும் நிலை உருவாகிறது.
 விபத்து, தொழில் போட்டி, முறையற்ற உறவு, பாலியல் உள்ளிட்டவற்றால் ஒருபுறம் கொலைகள் நடந்தேறும் நிலையில், அதற்கு இணையாக கடன் தொல்லை, குடும்பப் பிரச்னை, மோசடி, ஏமாற்றப்படுவது உள்ளிட்டவற்றாலும் மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. மக்கள்தொகை அதிகம் உள்ள மாநிலங்களில் இவ்வாறான மரணங்கள் நிகழ்வது வாடிக்கைதான் எனக் கூறப்பட்டாலும், விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசுக்கும், சமூகத்துக்கும் உண்டான பொறுப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது.
 அண்மையில், திருச்சியைச் சேர்ந்த தம்பதி தங்களது இரு குழந்தைகளுடன், திண்டுக்கல் கொடைரோடு தண்டவாளத்தில் கடன் தொல்லையால் ரயில் முன்பு பாய்ந்து உயிரை விட்டனர். இதேபோல், இணையதள லாட்டரியில் பொருள், பணத்தை இழந்த தொழிலாளி, மனைவி மற்றும் தனது மூன்று குழந்தைகளுடன் உயிரைப் போக்கிக் கொண்டதுடன், அதனை விடியோவாகப் பதிவு செய்து, கட்செவி அஞ்சலிலும் பரப்பி விட்டார். இதனைப் பார்த்த பலரும் வேதனைக்குள்ளாயினர். அவர்களை நினைத்து பரிதாபப்படுவதா, இல்லை ஏதுமறியாத குழந்தைகளையும் தவறான முடிவுக்கு பெற்றோர் தள்ளிவிட்டார்களே என ஆத்திரப்படுவதா என்ற குழப்பமே அனைவரிடத்திலும் ஏற்பட்டது. இந்த நிலை தொடரக் கூடாது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் அரசுக்கு மக்கள் வைக்கும் வேண்டுகோளாகும்.
 இது குறித்து சமூக ஆர்வலரும், கல்லூரி உதவிப் பேராசிரியருமான ஆர்.பிரணவ்குமார் கூறியது: இயற்கை சார்ந்த பழக்க, வழக்கங்களில் இருந்து மின்சார சாதனம் போல் மனிதர்கள் மாறிவிட்டனர். அதனால் ஏற்படும் விளைவுதான் மரணத்தை நெருங்குவது. செல்லிடப்பேசி, கணினி போன்றவை பயனுக்குரியது தான். அதனை எந்த வகையில் நாம் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் நன்மை, தீமை அமைந்திருக்கிறது. சமீப காலமாக, தமிழகத்தில் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலும் தற்கொலைகள் அதிகரித்துள்ளன.
 இதற்கு முக்கிய காரணம் வழிகாட்டுவதற்குரிய ஆள்கள் இல்லாதது, தங்களது பிரச்னைகளை மற்றவர்களிடம் மனம் விட்டு பேசாமல் இருப்பது, மன இறுக்கத்தில் இருப்பது போன்றவையே.
 தற்போதைய இளைஞர்களிடம் வாழ்வை எதிர்கொள்ளும் மன தைரியம் இல்லை. இவ்வாறான நிலை நீடிக்கக்கூடாது. நகரம், கிராமம் என அனைத்துப் பகுதியிலும் மனநல ஆலோசனை மையங்களை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தன்னார்வலர்களும், தமிழக அரசும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் ஓரளவாவது தற்கொலைகளைத் தடுக்க முடியும் என்றார்.
 தேவைப்படுகிறது விழிப்புணர்வு!

 ஆண்டுதோறும் செப்.10-ஆம் தேதி தற்கொலை தடுப்புத் தினம் அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும், மக்களிடத்தில் அது தொடர்பான விழிப்புணர்வை இன்னும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எந்தத் தொழிலாக இருந்தாலும் சரி, எவ்வாறான பணியில் இருந்தாலும் சரி மன இறுக்கம் ஏற்பட்டால் நண்பர்கள், குடும்பத்தினருடன் கலந்து பேசி பிரச்னைக்கு தீர்வு காண மட்டுமே முயற்சிக்க வேண்டும். அனைத்துக்கும் மரணம் தான் தீர்வு என்றால், இவ்வுலகில் மனிதர்கள் எண்ணிக்கையே இல்லாமல் போய்விடும்.
 அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மனநல ஆலோசனை வழங்குவதற்கான மருத்துவர்கள் உள்ளனர். பிரச்னை சிறிதளவில் இருக்கும்போதே அங்கு சென்று ஆலோசனை பெறலாம். இதன் மூலம் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்றார்.
 
 -எம். மாரியப்பன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com