திருப்பூரில் அத்துமீறிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

திருப்பூரில் அத்துமீறிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

அதிருப்தியடைந்த வேன் ஓட்டுநரான அர்ஜூன்ராஜ் (27) வாகனத்தில் அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளபோது எதற்கு பணம் கேட்கிறீர்கள் என்று சத்தியமூர்த்தியிடம் கேட்டுள்ளார். 

திருப்பூரில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் கூலிப்பாளையம் நால்ரோட்டில் ஊத்துக்குளி காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜமூர்த்தி என்பவர் செவ்வாய்க்கிழமை பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இதனிடையே, ஊத்துக்குளியில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த வேனை நிறுத்தி செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் சோதனை செய்துள்ளார். அப்போது வேன் ஓட்டுநர் சீட் பெல் அணியாமல் வந்ததால் ரூ.200 பணம் கேட்டுள்ளார்.

இதனால் அதிருப்தியடைந்த வேன் ஓட்டுநரான அர்ஜூன்ராஜ் (27) வாகனத்தில் அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளபோது எதற்கு பணம் கேட்கிறீர்கள் என்று ராஜமூர்த்தியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் அர்ஜூன்ராஜை தகாத வார்த்தையில் திட்டியதாகத் தெரிகிறது. 

இதனால் மனமுடைந்த அர்ஜூன்ராஜ் வேனில் வைத்திருந்த டீசலை எடுத்து உடலில் ஊற்றிவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே, அர்ஜூன்ராஜூக்கு ஆதரவாக அப்பகுதி வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் திருப்பூர்-ஈரோடு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ஊத்துக்குளி காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்த பொதுமக்கள்:

இதனிடையே, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தின்போது திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் காரில் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். அப்போது மறியலில் ஈடுபட்ட வேன் ஓட்டுநர் அர்ஜூன்ராஜ் மற்றும் பொதுமக்கள் உதவி ஆய்வாளர் பணம் கேட்டது தொடர்பாக அவரிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, காவல் துறை உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட குணசேகரன் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட உதவி ஆய்வாளர் ராஜமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தார். மேலும், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து அனுப்பிவைத்தார்.

உதவி ஆய்வாளர் தாற்காலிக பணியிடை நீக்கம்:

இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி காங்கயம் டிஎஸ்பி செல்வதுக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் பேரில் விசாரணை நடத்தியுள்ளார். இதையடுத்து, சோதனைச்சாவடியில் அத்துமீறியதாக உதவி ஆய்வாளர் ராஜமூர்த்தியை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com