மகளிர் பாதுகாப்புக்காக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பக்கம் சென்னையில் அறிமுகம்

சென்னையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பக்கம் ஆகியவற்றை பெருநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
மகளிர் பாதுகாப்புக்காக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பக்கம் சென்னையில் அறிமுகம்

சென்னை: சென்னையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பக்கம் ஆகியவற்றை பெருநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்த விவரம்:
தெலங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து, எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகு, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இதன் விளைவாக தமிழக காவல்துறையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை மேம்படுத்துவற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக காவலன் செல்லிடப்பேசி செயலி குறித்து பொதுமக்களிடம் காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் காவலன் செயலியை சுமார் 6.50 லட்சம் பேர் செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதில் சென்னையில் மட்டும் 3.50 லட்சம் பேர் செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கட்செவி அஞ்சல் எண் (வாட்ஸ்அப்), முகநூல் பக்கம் (ஃபேஸ்புக்) ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
சென்னை பெருநகரில் ஏதேனும் இடங்களிலோ, சூழ்நிலைகளிலோ, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற தன்மை இருப்பதாக உணர்ந்தால், கீழ்க்கண்ட வசதிகளைப் பயன்படுத்தி தகவல் தெரிவிக்கலாம். அதன்படி கட்செவி அஞ்சல், எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அளிக்க  75300 01100 என்ற செல்லிடப்பேசி எண்ணையும், முகநூல் மூலம் புகார் அளிக்க www.facebook.com/chennai.police என்ற பக்கத்தையும், மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்க dccwc.chennai@gmail.com என்ற முகவரியையும், அஞ்சல் மூலம் புகார் அளிக்க, 
துணை ஆணையாளர், 
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு
எதிரான குற்றத் தடுப்புப்பிரிவு,சென்னை பெருநகர காவல் துறை,
கிரீம்ஸ் சாலை (ஆயிரம் விளக்கு காவல் நிலைய வளாகம்), 
ஆயிரம்விளக்கு,சென்னை-600006 தொடர்பு கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com