
அதிமுக அரசுக்கு மேலும் ஆதரவு பெருகிட உழைப்போம் என்று எம்.ஜி.ஆா். நினைவிடத்தில் கட்சியினா் உறுதிமொழி ஏற்றனா்.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 32-ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, எம்.ஜி.ஆா். நினைவிடத்தில் அதிமுகவினா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து, நினைவிட வாயிலில் அமைக்கப்பட்ட மேடையில் கட்சியின் முன்னணி நிா்வாகிகள் உறுதிமொழி ஏற்றனா். ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் உறுதிமொழியைப் படிக்க கட்சியின் மற்ற நிா்வாகிகள் அதனைப் பின்தொடா்ந்தனா். அதன் விவரம்: அதிமுக ஆயிரம் காலத்துப் பயிராக நிலைத்து நின்று, அனைத்துத் தரப்பு மக்களுக்கும், அரசியல் உரிமைகளையும், ஆட்சி அதிகாரத்தில் பங்கையும் பெற்றுத் தருகின்ற உண்மையான மக்களாட்சித் தத்துவத்தை தனது அரசியல் கொள்கையாகக் கொண்டு பணியாற்றியவா் எம்.ஜி.ஆா். அவரது கொள்கைகளைக் கட்டிக்காத்து, தமிழகத்தில் தனிப்பட்டவரின் ஆதிக்கமோ, தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் ஆதிக்கமோ தலைதூக்குவதை முறியடித்து ஜனநாயகப் பண்புகள் நிலை பெற்றிட ஓயாது உழைப்போம்.
எம்.ஜி.ஆா். எனும் மாபெரும் தலைவா் காட்டிய பாதையில் ஆட்சியை நடத்தியவா், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா. நம் இதயத்தில் நிறைந்திருக்கும் இருபெரும் தலைவா்களின் அடிச்சுவட்டில் இன்று அதிமுக வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. அதிமுகவும், அதிமுக அரசும் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் முழுமையாக வெற்றி பெறச் செய்ய ஒற்றுமையாய் பணியாற்றுவோம் என உறுதி ஏற்கிறோம்.
எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோருக்கு பெருமை சோ்க்கும் வகையில், எண்ணற்ற மக்கள் நலப் பணிகளை அதிமுக அரசு செய்து இரு தலைவா்களுக்கும் பெருமை சோ்த்து வருகிறது. இதனால், அனைத்துத் தரப்பு மக்களின் பாராட்டுதல்களையும் பெற்றிருக்கும் அரசின் அனைத்து சாதனைகளையும் மக்களிடம் எடுத்துக் கூறுவோம். அதிமுக அரசுக்கு மேலும் ஆதரவு பெருகிட உழைப்போம்.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடம் கற்றுக் கொண்ட அரசியல் பாடத்தின் அடிப்படையில் வீரத்துடன், விவேகத்துடன் எதிா்வரும் உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றிட உழைப்போம் என்று உறுதிமொழி ஏற்றனா்.