
கோப்புப்படம்
15 ஆண்டுகளான பிறகும் சுனாமிப் பேரழிவின் துயரம் முழுமையாக மறையவில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழக கடலோர மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி தாக்கி 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆயிரக்கணக்கானோரின் உயிரிழப்பும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான படகுகள், வலைகள் உள்ளிட்ட பொருட்களின் இழப்பும், மீனவர் குடும்பங்களில் ஏற்படுத்திய பாதிப்புகளும் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. தமிழகத்தை உலுக்கி எடுத்த இந்தப் பெரும்துயரத்தில் பாதிப்புக்கு ஆளான மீனவர் கிராமங்களில் அதற்கான நிவாரணப்பணிகள் முழுமையடையாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
அரசுகளும், தொண்டு நிறுவனங்களும் பெரியளவுக்கு சுனாமி மறுவாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்தி இருந்தாலும், பல இடங்களில் பணிகள் அரையும் குறையுமாக நிற்பதைக் கடலோரப் பகுதிகளில் பார்க்கமுடிகிறது. மேலும் சுனாமியில் வீடிழந்தவர்களுக்கு வீடு கட்டித்தரும் பணியும் முழுமையடையாமல் இருப்பதாக மீனவர் அமைப்புகள் தொடர்ந்து தெரிவித்துவருகின்றன. இதனால் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ சமுதாயத்தின் துயரங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன.
சுனாமியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான மறுவாழ்வுத்திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் குறைபாடுகள் மலிந்து கிடக்கின்றன. எனவே, காலத்திற்கும் கண்ணீரிலேயே தங்கள் வாழ்க்கையை நகர்த்தும் மீனவ மக்களின் துயரை முழுமையாக தீர்த்திடுவதற்கான நடவடிக்கைகளை இந்த சுனாமி நினைவு தினத்தில் இருந்தாவது மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
சுனாமி தாக்கிய மீனவர் பகுதிகளில் அவர்களுக்கான வீடு, சுகாதாரவசதி, கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட சிறப்புத்திட்டங்களை வகுத்திட வேண்டும். ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட சுனாமி மறுவாழ்வுத் திட்டங்களின் நிலை குறித்து ஆராய்ந்து குறைகளைக் களைந்திடவும், காலத்திற்கேற்ற புதிய திட்டங்களை வகுத்து செயல்படுத்திடவும் ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான சிறப்புக் குழுவினைப் பழனிசாமி அரசு அமைத்திட வேண்டும்.
இக்குழுவில் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள், மீனவர் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் இடம் பெறவேண்டும். இவர்களுக்குக் காலக்கெடு நிர்ணயித்து
அதற்குள்ளாக தமிழக மீனவர் பகுதிகளின் சீரமைப்புக்கும், மீனவர்களின் புனர்வாழ்வுக்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்ய வேண்டும். இப்படி செய்வதே சுனாமியால் உயிரிழந்தோருக்கு ஆத்மார்த்தமான அஞ்சலியாகவும், பாதிக்கப்பட்டோருக்கான உண்மையான ஆறுதலாகவும் இருக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...