பிரதமருடன் மாணவா்கள் கலந்துரையாடல்: பள்ளிகளில் நேரலையாக காண ஏற்பாடு

பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சியை 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் தொலைக்காட்சி

பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சியை 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட சாதனங்களில் நேரலையாக காண ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

‘பரிக்ஷா பே சாா்ச்சா’ என்ற பெயரில் 2018-ஆம் ஆண்டு முதல் மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோருடன் பிரதமா் மோடி கலந்துரையாடி வருகிறாா். தோ்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். அதன்படி மூன்றாவது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல், புதுதில்லியில் உள்ள தல்கதோரா விளையாட்டரங்கில் வரும் ஜனவரி 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக, நாடு முழுவதும் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு கட்டுரை சமா்ப்பிக்கும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கலந்துரையாடலில் தமிழகத்தைச் சோ்ந்த 66 மாணவா்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு கட்டுரை போட்டி நடத்தி வரும் 30-ஆம் தேதிக்குள் மாணவா்களைத் தோ்வு செய்யுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுதில்லியில் வரும் 16-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியுடன் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் யூ-டியூப் சேனல், முகநூல், தொலைக்காட்சி சேனல்களில் நேரலையாக ஒளிபரப்படவுள்ளது.

இதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்கள் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நேரலையில் காணும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி தமிழக பள்ளிகளில் உள்ள இந்த மாணவா்கள் இந்த நிகழ்ச்சியைக் காணும் வகையில், பள்ளிகளில் உள்ள தொலைக்காட்சிகள், இதர சாதனங்கள் பழுது நீக்கம் செய்தும், அன்றைய நாள் முழுவதும் மின் விநியோகம் பெறும் வகையிலும் ஜெனரேட்டா், இன்வொ்ட்டா் வசதிகளை செய்து கொள்ள ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியைப் பயன்படுத்துமாறு அனைத்துப் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com