கிராமங்கள் வளர்ச்சி பெறாமல் தேசத்தின் வளர்ச்சி சாத்தியமில்லை: சத்குரு கருத்து

கிராமப்புற மக்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் நல்வாழ்வில் வளர்ச்சியை உருவாக்காமல் தேசம் வளர்ச்சி பெறுவது சாத்தியமில்லை என்று
கிராமங்கள் வளர்ச்சி பெறாமல் தேசத்தின் வளர்ச்சி சாத்தியமில்லை: சத்குரு கருத்து


கோவை: கிராமப்புற மக்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் நல்வாழ்வில் வளர்ச்சியை உருவாக்காமல் தேசம் வளர்ச்சி பெறுவது சாத்தியமில்லை என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் கூறினார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கான 2-ம் கட்ட தேர்தல் இன்று (டிசம்பர் 30) நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, கோவை முட்டத்துவயல் பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் இன்று மதியம் வாக்களித்தார். 

வாக்களித்து விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பஞ்சாயத்து ராஜ் என்பது நம் நாட்டின் ஜனநாயகத்தில் மிகவும் தனித்துவமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடைமுறை. நாம் இதன் முக்கியத்துவம் என்ன என்பதை இன்னும் முழுமையாக உணராமல் இருக்கிறோம். பஞ்சாயத்து ராஜ் முறையில் கிராம அளவிலேயே ஒரு சிறு நாடாளுமன்றத்தை உருவாக்கி வைத்துள்ளோம். ஆனால், இதற்கு இன்னும் முழுமையாக உயிர் கொடுக்காமல் இருக்கிறோம்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பல பெரிய கொள்கைகள் உருவாக்கப்பட்டாலும், பஞ்சாய்த்து ராஜ் மூலம் கிராம மக்கள் தங்களை தாங்களே நிர்வகித்துக் கொள்ளப் பல வழிகள் உள்ளன. அதற்கான சுதந்திரமும் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்குவது, ஊரக வளர்ச்சி திட்டங்களை மேற்பார்வையிடுவது போன்ற பல அதிகாரங்கள் அவர்கள் கையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை, மேலும் வலுப்படுத்த வேண்டும். கிராம மக்களின் நல்வாழ்வுக்கு இது எந்தளவுக்கு அவசியமானது என்பதை புரிந்துகொள்ள போதிய கல்வி அறிவு தேவைப்படுகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பஞ்சாயத்துத் தேர்தல் தமிழகத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. கிராம மக்கள் அனைவரும் இந்த தேர்தலில் ஓட்டுப் போட வேண்டும். குறிப்பாக, கட்சி, மதம், சாதியை விட்டுவிட்டு கிராம முன்னேற்றத்துக்கு பொறுப்பாகச் செயல்படும் நபர்களுக்கு ஓட்டுப் போட வேண்டும்.  

கிராமப்புற மக்களின் நல்வாழ்வும், அவர்களின் பொருளாதார வளர்ச்சியும் மிக மிக முக்கியம். நம் நாட்டில் 60 சதவீதம் மக்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள். அவர்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் நல்வாழ்வில் வளர்ச்சியை உருவாக்காமல் தேசம் வளர்ச்சி பெறுவது சாத்தியமில்லை. ஆகவே, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலைப் போன்று பஞ்சாயத்துத் தேர்தலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என சத்குரு கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com