நெல்லை கண்ணன் சர்ச்சை - நடந்தது என்ன?

பிரதமர், உள்துறை அமைச்சரை அவதூறாகப் பேசியதற்காக நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு நிலையில் இந்த சர்ச்சை விவகாரத்தில் நடந்தது என்ன? என்பதை தெரிந்துகொள்ளலாம்.
நெல்லை கண்ணன் சர்ச்சை - நடந்தது என்ன?

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,  எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக், முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். 

இந்தக் கூட்டத்தில் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்துகொண்டு பேசுகையில், 'இஸ்லாமியர்கள் யாரேனும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை 'செய்வார்கள்' என எண்ணியதாக பேசினார். மேலும், இந்து மதம் குறித்தும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியுள்ளார். ராமர் கோவில் விவகாரம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, கதேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் பேசினார். 

நெல்லை கண்ணனின் இந்தப் பேச்சு பிரதமர், உள்துறை அமைச்சரை கொலை செய்ய தூண்டுவது போல் இருந்ததாகக் கூறி பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டன. மேலும், தொடர்ந்து பல்வேறு புகார்களும் அளிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், நெல்லை கண்ணன் மீது குற்றம் செய்யத் தூண்டுதல், இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் மேலப்பாளையம் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனர். 

இதையடுத்து போலீஸார் தன்னை கைது செய்யலாம் என்பதை அறிந்த நெல்லை கண்ணன், திருநெல்வேலி நகரம் காந்திமதி அம்மன் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் வெளியேற செவ்வாய்க்கிழமை காலையில் முயற்சித்தார். ஆனால் அதற்குள் அங்கு வந்த பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள், அவர் செல்லவிருந்த காரின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை கண்ணன் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

இதனிடையே பிணையில் வெளிவர முடியாதபடி வழக்குப்பதிவு செய்த போலீஸார் நெல்லை கண்ணனை கைது செய்யவில்லை எனக் கூறி பாஜக மற்றும் இந்து அமைப்புக்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் நெல்லை கண்ணன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நெல்லை கண்ணனை செவ்வாய்க்கிழமை மாலைக்குள் கைது செய்வதாக உறுதியளித்தனர்.

இதனிடையே போராட்டம் எதிரொலியாக அதிவிரைவு படையினர் நெல்லை கண்ணன் வீட்டு முன்பு குவிக்கப்பட்டனர். மேலும் எந்த நேரத்திலும் நெல்லை கண்ணன் கைது செய்யப்படலாம் என்ற தகவலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக அவருடைய வீட்டின் முன்பாக திமுக, காங்கிரஸ், முஸ்லிம் அமைப்பினரும் திரண்டதால், அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே திருநெல்வேலி மாநகர காவல் துறை நெல்லை கண்ணணிடம் விசாரணையில் இறங்கியது. 

அப்போது, நெல்லை கண்ணனுக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அதனால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும் காவல்துறையிடம் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.  

அதைத்தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள தனியார்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கும் படையெடுத்த பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள், அவரை அங்கிருந்து வெளியேற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நெல்லை கண்ணன் ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என அவருடைய குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் தனிப்பிரிவு போலீஸார், நெல்லை கண்ணனை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

நெல்லை கண்ணனை செவ்வாய்க்கிழமை மாலையில் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டிருந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருடைய உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தால், கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எப்போதுமே அமைதியாக இருக்கும் நெல்லை அம்மன் சன்னதி தெரு, நெல்லை கண்ணனின் விவகாரத்தால் செவ்வாய்க்கிழமை முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com