சுடச்சுட

  

  இது ஒரு சிறப்பான இடைக்கால பட்ஜெட்: முதல்வர் பழனிசாமி

  By DIN  |   Published on : 01st February 2019 07:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  EPS_1


  இடைக்கால பட்ஜெட் வேளாண் துறை பிரச்சனைகளை தீர்ப்பது, நடுத்தர வர்க்கத்தினர்க்கு வரிக் குறைப்பு, வீட்டுவசதி மற்றும் கட்டுமானத் துறைக்கு வரிச்சலுகைகள் என எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திருக்கிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, 

  "2019-2020 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கை மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயலால் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே, குறிப்பாக, வேளாண் துறை பிரச்சனைகளை தீர்ப்பது, நடுத்தர வர்க்கத்தினர்க்கு வரிக் குறைப்பு, வீட்டுவசதி மற்றும் கட்டுமானத் துறைக்கு வரிச்சலுகைகள் போன்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையே, இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  மேற்கூறிய முக்கிய எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திருக்கும் அதே வேளையில், நிதிநிலைச் சமன்பாடும் பாதிக்கப்படாமல் இந்த நிதிநிலை அறிக்கையை அளித்திருப்பது பாராட்டுக்குரியது. பத்து அம்சங்கள் கொண்ட தொலைநோக்கு பார்வையை வடிவமைத்து, 2030-ஆம் ஆண்டிற்கு இந்தியாவை முன்னெடுத்து செல்லும் திட்டங்களைக் கொண்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்காக மத்திய நிதியமைச்சரை நான் மனமாறப் பாராட்டுகிறேன்.    
      
  சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் வருமானத்தை உறுதி செய்யும் பிரதமர் கிஸான் சம்மான் நிதி திட்டத்தை செயல்படுத்துவதற்கான மத்திய அரசின் அறிவிப்பை நான் வரவேற்கிறேன்.  இத்திட்டம் விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும். இத்திட்டம் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளுக்கு மிகச் பெரும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும்.
      
  வேளாண் கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு கூடுதலாக மூன்று சதவீதம் வட்டி சலுகை வழங்கப்பட்டுள்ளதையும், இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வட்டிச் சலுகை வழங்கப்பட்டுள்ளதையும் வரவேற்கிறேன்.  கால்நடை மற்றும் மீன்வளத் துறை கடன்களுக்கும் இரண்டு சதவீத வட்டிச் சலுகையையும், முறையாக கடனை திரும்பச் செலுத்தியவர்களுக்கு மூன்று சதவீத கூடுதல் வட்டிச் சலுகையையும் வழங்கி இருப்பதும் பாராட்டத்தக்கது.  இந்த அறிவிப்புகள் முதன்மைத் துறையான வேளாண்மைத் துறை மற்றும் அதனைச் சார்ந்த துறைகள்  வேகமாக வளர்ச்சி அடைய உதவும் என நான் நம்புகிறேன்.  
      
  மீனவர்களின் நலன் காக்க, தனியாக மீன்வளத் துறை ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இவ்வரவு செலவுத் திட்ட அறிவிப்புக்களில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்ந்த தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் ஒரு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கான வட்டியில் இரண்டு சதவீதம் குறைக்கப்படும் என்ற அறிவிப்பின் காரணமாக முதல் முறை தொழில் முனைவோர் உள்ளிட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் கடன் பெறும் நிலை வெகுவாகக் குறையும் என நான் கருதுகிறேன்.  

  பிரதமர் ஷரம் யோகி மாந்தன் திட்டம் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் மாத ஓய்வூதியம் 3,000 ரூபாய் பெறும் வகையில் மாதந்தோறும் 100 ரூபாய் செலுத்தினாலே போதும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்ககூடியதாகும்.  அறுபது வயதைக் கடந்த அமைப்பு சாரா தொழிலாளர்களின் பொருளாதார பாதுகாப்பிற்கு இத்திட்டம் பெரிதும் உதவும்.  இதைத்தவிர, தேசிய கல்வி இயக்கம், சமூக நலத் திட்டங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், சுகாதாரம் போன்ற பல துறைத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் உயர்த்தப்பட்டிருப்பதை நான் வரவேற்கிறேன்.  
      
  தனிநபர் வருமான வரிவிகிதங்கள் பெருமளவில் குறைக்கப்படலாம் என்று நடுத்தரவர்க்க மக்களிடையே  எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில், ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான வரிவிதிக்கத்தக்க வருமானத்தின் மீதான வரிவிலக்கு என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. 50,000 ரூபாய்  மதிப்பிலான நிலையானக் கழிவு  (Standard Deduction) என்ற அறிவிப்பும்  மற்றும் வருமான வரி விதிப்பில்,  ஆதார நிலையிலேயே (Tax deduction at source) 40,000 ரூபாய் வரை வைப்புத் தொகைக்கான வட்டியை கழித்து கொள்வதற்கான அறிவிப்பு நடுத்தர வர்க்கத்தினர், மாத ஊதியம் பெறுவோர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி அளிக்கும். இது நடுத்தர வர்க்கத்தினருக்காகவே அவர்களது நன்மையைக் கருத்தில் கொண்டு அவர்களது பிரச்சனைகளை சமாளிப்பதற்கு உதவும் வகையில் செய்யப்பட்டுள்ள பொருத்தமான அறிவிப்பாகும்.  

  பசுவளர்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு, கிராமப்புற சாலைகளை மேம்படுத்த  நிதி ஒதுக்கீடு, 2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு  என்ற திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு, போன்ற திட்டங்களின் மூலம் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடடையும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் இது ஒரு சிறப்பான இடைக்கால பட்ஜெட் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai