Enable Javscript for better performance
ஓய்வு பெற்ற காவலர்களுக்கு நலவாரியம்: முதல்வர் பழனிசாமி- Dinamani

சுடச்சுட

    

    ஓய்வு பெற்ற காவலர்களுக்கு நலவாரியம்: முதல்வர் பழனிசாமி

    By DIN  |   Published on : 01st February 2019 03:32 AM  |   அ+அ அ-   |    |  

    medal

    சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற காவலர் பதக்கம் வழங்கும் விழாவில் கடலோரப் பாதுகாப்பு குழும காவல்துறை துணைத் தலைவர் க.பவானீஸ்வரிக்கு மெச்சத்தக்க பணிக்கான காவல் பதக்கத்தை வழங்குகிறார்

    ஓய்வு பெற்ற காவல் துறையினருக்கான நல வாரியத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
    குடியரசுத் தலைவர் மற்றும் தமிழக முதல்வரின் பதக்கங்கள் வழங்கும் விழா,  சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பதக்கங்களை வழங்கி முதல்வர் பழனிசாமி பேசியது:-
    சட்டம், ஒழுங்கு பராமரிப்பு பணியைக் காவல் துறையினர் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் காவல் துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் முன்கூட்டியே கண்டறியப்பட்டு அவை அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. நிகழாண்டில் இதுவரை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 511 உதவி ஆய்வாளர்களும், 6 ஆயிரத்து 140 காவலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இப்போது காவல் துறையில் 5 சதவீதத்துக்கும் குறைந்த பணியிடங்கள் மட்டுமே காலியாகவுள்ளன. அந்த இடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    காவலர் நல வாரியம்: பணியில் உள்ள காவலர்கள் நலன்கள் மட்டுமின்றி ஓய்வு பெற்ற காவலர்களின் நலன்களையும் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஓய்வு பெற்ற காவலர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கான நல வாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    பல்வேறு போராட்டங்களைத் திறம்பட கையாள்வதிலும், தீமையை விளைவிக்கும் இயக்கங்களின் முயற்சிகளை முறியடிப்பதிலும், பிரிவினைவாத இயக்கங்கள் வளராமல் முளையிலேயே கிள்ளி எறிவதிலும், இயற்கை சீற்றங்கள்-பேரழிவுகளின் போது தேவையான நிவாரண பணிகளில் ஈடுபடுவதிலும் காவல் துறையினர் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். சட்டம்-ஒழுங்கில் அமைதியான மாநிலமாக தமிழகம் உள்ளதால், வளங்கள் தேடி வந்து, மாநிலம் வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதற்கு காவலர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் உள்ளது.
    காவல் துறையை நவீனப்படுத்தியும், அவர்களது திறனை மேம்படுத்தியும், அவர்களுக்கு நவீன சாதனங்கள் வழங்கியும், அவர்களது மனவலிமை மேம்பட பயிற்சிகள் வழங்கியும் வருவதால், ஜாதி கலவரங்கள், தீவிரவாதம், மதவாதம், தொழிலாளர் கிளர்ச்சி போன்றவை பெருமளவில் குறைந்துள்ளன.
    பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி பொது மக்களின் ஒத்துழைப்புடன் நடந்து வருகிறது. இதுவரை 2 லட்சத்து 79 ஆயிரத்து 440 கேமராக்கள் தமிழகம் முழுவதும் பொருத்தப்பட்டு குற்ற நிகழ்வுகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியை தொடர்ந்து செயல்படுத்தி குற்றச் செயலற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும். இந்த முயற்சிகளையும், பணிகளையும் தமிழக அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தும்.
    அதேசமயம், காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் நாட்டில் ஏற்படும் குற்ற நிகழ்வுகளுக்கு, யாரும் சிந்திக்காத வகையில் மாறுபட்ட சிந்தனையோடு அதற்குத் தீர்வு காண வேண்டும் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
    முன்னதாக, காவல் துறை இயக்குநர் தே.க.ராஜேந்திரன் வரவேற்றார். சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன் நன்றி தெரிவித்தார்.
    காவலர்களின் அணிவகுப்பு: தமிழக காவல் துறையின் சிறப்பு காவல் அணி, சிறப்புப் படை அணி, பெண்கள்-ஆண்கள் கமாண்டோ அணி, கடலோரக் காவல்படை அணி ஆகியவற்றின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் பழனிசாமி ஏற்றுக் கொண்டார்.  இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மற்றும் முதல்வரின் மெச்சத்தக்க பணிக்கான காவல் பதக்கங்கள் 197 பேருக்கு வழங்கப்பட்டன. 
    இந்த நிகழ்ச்சியில் காவல் துறையினரின் யோகாசனங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp