Enable Javscript for better performance
வனப் பகுதியிலிருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்தது சின்னத்தம்பி யானை- Dinamani

சுடச்சுட

    

    வனப் பகுதியிலிருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்தது சின்னத்தம்பி யானை

    By DIN  |   Published on : 01st February 2019 01:26 AM  |   அ+அ அ-   |    |  

    chinna-thambi

    கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதிக்குள் சென்ற யானை சின்னத்தம்பி. (வலது) யானையின் கழுத்தில் பொருத்தப்பட்ட ரேடியோ காலர் கருவியின் மூலம் யானை கடந்த பாதையின் பதிவு.

    கோவையில் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வரகளியாறு பகுதியில் விடுவிக்கப்பட்ட சின்னத்தம்பி யானை வியாழக்கிழமை அதிகாலை வனப் பகுதியை விட்டு வெளியேறியது. 
     கோவை சுற்றுப்பகுதிகளில் சுற்றித் திரிந்த சின்னத்தம்பி யானை, கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி கடந்த வெள்ளிக்கிழமை (25ஆம் தேதி) பிடிக்கப்பட்டது. பின்னர், கோவையில் இருந்து லாரி மூலம் டாப்சிலிப்புக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து 25 கி.மீ. தொலைவில் வரகளியாறு வனப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு கும்கி யானை கலீம் உதவியுடன் விடுவிக்கப்பட்டது. 
     அதன்பின் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இருந்து இரண்டு நாள்கள் வரகளியாறு பகுதியிலேயே சின்னத்தம்பி யானை இருந்ததாக வனத் துறையினர் தெரிவிக்கின்றனர். அதற்குப் பிறகு அங்கிருந்து இடம்பெயரத் துவங்கி கூமாட்டி,  கதவு சாத்தி சென்று புதன்கிழமை நள்ளிரவு ஆழியாறு அருகே உள்ள பனப்பள்ளம் பகுதியில் இரவு 1.30 மணிக்கு இறங்கியுள்ளது தெரியவந்துள்ளது. பனப்பள்ளம் பகுதியில் இருந்து சமவெளிப் பகுதியான பந்தக்கல்அம்மன்பதி,  பொங்காளியூர் சென்றுள்ளது. 
    இதையறிந்த வனத் துறையைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கொண்ட குழுவினர் யானையைப் பின்தொடர்ந்து வனப் பகுதிக்கு அதை மீண்டும் விரட்ட முயற்சி செய்தனர். ஆனால், சின்னத்தம்பி யானை தொடர்ந்து வடக்கு நோக்கி கோட்டூர்மலையாண்டி பட்டினத்துக்குள் சென்றது. அங்கு சென்ற வனத் துறைக் குழுவினர் யானையை அங்கலக்குறிச்சி நோக்கி விரட்டினர். அங்கலக்குறிச்சியில் இருந்து பொள்ளாச்சி-வால்பாறை சாலையைக் கடந்து கோபால்சாமி மலை அடிவாரத்துக்கு சின்னத்தம்பி யானை சென்றது.  செல்லும் வழியில் பிஏபி கால்வாயில் இறங்கி தண்ணீர் அருந்திவிட்டு கால்வாயைக் கடந்து சென்றது. 
    காலை 9 மணியளவில் கோபால்சாமி மலை வனப் பகுதிக்குச் சென்ற சின்னத்தம்பி மாலை வரை அங்கேயே இருந்தது. கோபால்சாமி மலை அடிவாரத்தில் வனப் பகுதிக்கு அருகிலேயே வனத் துறையினரும் முகாமிட்டு யானையின் நடமாட்டத்தைக் கவனித்து வருகின்றனர். டாப்சிலிப்பில் இருந்து கலீம் மற்றும் இரண்டு கும்கி யானைகளை கோபால்சாமி மலை வனப் பகுதிக்கு கொண்டுவர வனத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். சின்னத்தம்பி யானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டுள்ளதால் அதன் நடமாட்டத்தைக் கண்காணிப்பது எளிது என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
    மனிதர்களைத் தாக்க முயற்சிக்கவில்லை: சின்னத்தம்பி யானை பந்தக்கல் அம்மன்பதி, பொங்காளியூர், கோட்டூர் மலையாண்டிபட்டினம், அங்கலக்குறிச்சி உள்ளிட்ட பல கிராமங்களைக் கடந்துசென்றபோதிலும் மனிதர்கள் யாரையும் தாக்க முயற்சிக்கவில்லை. வரகளியாற்றில் இருந்து ஆழியாறை அடைய 35 கி.மீ. முதல் 40 கி.மீ. வரை சின்னத்தம்பி பயணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
    வனத் துறையினர் கூறுகையில், ரேடியோ காலர் கருவி மற்றும் வனத் துறை குழுவின் வாயிலாக நேரடியாகவும் கண்காணிக்கிறோம். தற்போது அங்கலக்குறிச்சி பகுதியை அடுத்த கோபால்சாமி மலை பகுதியில் யானை உள்ளது. இந்த யானை இருக்கும் இடத்தில் இருந்து சற்று தொலைவில் மற்றொரு காட்டு யானையும் வனப் பகுதிக்குள் உள்ளது. அதனால், கோபால்சாமி மலைக்கு கிழக்குப் பகுதிக்கு சின்னத்தம்பி செல்லவில்லை என்றனர். 
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp