ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வெளியேறிய வாயு தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

திருவெண்ணெய்நல்லூர் அருகே விளைநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வெளியேறிய ரசாயன வாயு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வெளியேறிய வாயு தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

திருவெண்ணெய்நல்லூர் அருகே விளைநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வெளியேறிய ரசாயன வாயு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (55). இவர், தனது விளைநிலத்தில் விவசாயப் பயன்பாட்டுக்காக  450 அடியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, கடந்த 3 மாதங்களாக மூடி வைத்திருந்தார். இந்த ஆழ்துளைக் கிணற்றில் நீர் மூழ்கி மின் மோட்டாரை பொருத்தி, விவசாயத்துக்கு நீரை இறைக்கும் பணியில் கடந்த சில தினங்களாக ஈடுபட்டிருந்தார்.

வெள்ளிக்கிழமை காலை, மின் மோட்டாரை  இயக்கும்போது ஆழ்துளைக் குழாயிலிருந்து தண்ணீர் குறைவாகவும் வாயு அதிகமாகவும் வெளியேறின.   இதையடுத்து, ஏழுமலை ஆழ்துளைக் கிணறு அருகில் பூஜை செய்து கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டதாகத் தெரிகிறது. அப்போது, ஆழ்துளைக் கிணற்றில் இருந்து வெளியேறிய வாயுவில் குபீரென தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஏழுமலை மற்றும் அருகிலிருந்தவர்கள் குடம், குடமாய் நீரை ஊற்றி தீயை அணைத்தனர். 

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தரப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன் விரைந்து வந்து, ஆழ்துளைக் கிணற்றை ஆய்வு செய்தார்.  பின்னர், அவர் கூறியதாவது:  ஆழ்துளைக் கிணறை மூடி வைத்திருந்ததால், அதில் ஒருவிதமான ரசாயன வாயு உருவாகி தேங்கியுள்ளது.  நீருடன் கலந்து வெளியேறிய ரசாயன வாயு அருகில் சென்று கற்பூர தீபம் காண்பித்ததால், தீப்பிடித்துக் கொண்டது.  

இன்னும் ஓரிரு நாள்கள் ஆழ்துளைக் குழாயை திறந்து வைத்தால் வாயு முழுவதும் வெளியேறி விடும். அதன்பின்னர்,  நீரை இறைத்து  பயன்படுத்தலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com