சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் 

சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் 

சென்னை: சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கோவை தடாகம் பகுதியில் பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி என்று பொதுமக்களால் அழைக்கப்படும் காட்டு யானை, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட டாப்சிலிப் வனப் பகுதியில் அண்மையில் விடப்பட்டது.ஆனால் அது மீண்டும் திரும்பவும் கோவை பகுதிக்கே நடந்து வந்து சேர்ந்து விட்டது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், " சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றினால் நல்லது என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், அந்த யானையை கும்கியாக மாற்றக் கூடாது எனக் கோரிக்கை எழுந்திருப்பது குறித்து பரிசீலிக்கப்படும். தமிழகத்தில் உள்ள 101 யானை வழித் தடங்களிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன . அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது" என்றார்.

அதேநேரம் சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விலங்குகள் நல ஆர்வலராணா அருண் பிரசாத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், யானை - மனிதர் மோதலை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவும், ஊருக்குள் நுழைந்து பிடிபடும் யானைகளை வேறிடத்துக்கு கொண்டு செல்வது தொடர்பான விதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அருண் பிரசாத் முறையீட்டை திங்கள் பிற்பகலில் விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறி இருந்தது.

இந்நிலையில் சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்த வழக்கு மதியம் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் பதில்மனு தாக்கல் செய்தார். அதேபோல் தமிழக தலைமை வனப் பாதுகாவலர் ஸ்ரீவத்சவா தரப்பிலும் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்தாவது: 

கோவை தடாகம் பகுதியில் பிடிக்கப்பட்ட யானை சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை. அதனை இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் காட்டுக்குள் திருப்பி அனுப்பும் முயற்சிகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருகிறது.

அதற்கு என்ன விதமான சிகிச்சை அளிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒரு யானையை கும்கியாக மாற்றுவது என்பது அதன் வயது உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படுவது. சின்னத்தம்பி விவகாரத்தில் தற்போது அது குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை.

இவ்வாறு பதில் மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com