சுடச்சுட

  

  குழந்தை கடத்தலைத் தடுக்க நவீன தொழில்நுட்பம்: கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அறிமுகம்

  By DIN  |   Published on : 06th February 2019 11:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மருத்துவமனைக்குள் குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக, அதி நவீன தொழில்நுட்பத்திலான ரேடியோ அலைக்கற்றை சாதனங்கள் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளன.
      குழந்தைகளை அவர்களது பெற்றோரைத் தவிர வேறு எவரேனும் எடுத்துச் சென்றால், அந்த சாதனங்கள் எச்சரிக்கை ஒலி எழுப்பும் என்றும், அதுதொடர்பான காட்சிகளை மருத்துவமனைக்குள் அமைக்கப்பட்டுள்ள திரையில் காட்சிப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சுமார் ரூ. 8 லட்சம் மதிப்பிலான அந்த சாதனங்கள், தற்போது சீமாங் எனப்படும் மகப்பேறு பிரிவில் பொருத்தப்பட்டிருப்பதாகவும், அடுத்தகட்டமாக மேலும் ஒரு குழந்தைகள் பிரிவில் அவற்றை பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
  பிறந்த குழந்தைகள் மருத்துவமனைக்குள்ளேயே கடத்தப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. அதனைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டாலும், அவற்றால் பெரிய அளவில் பயனேதும் இல்லை.
  இந்த நிலையில், இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமலிருக்க நவீன தொழில்நுட்பத்தின் உதவியை நாட அரசு முடிவு செய்தது. அதன்படி, ரேடியோ அலைக்கற்றை சாதனங்கள் மூலமாக குழந்தைகள் கடத்தலை ஒழிக்க திட்டமிடப்பட்டது. அதாவது, பிறந்த குழந்தையின் காலில் பார்கோடுடன் கூடிய பட்டை ஒன்று கட்டப்படும். அதேபோன்று குழந்தையின் தாய் மற்றும் அவருடன் இருப்பவருக்கும் தனித்தனியே பார்கோடு பட்டைகள் வழங்கப்படும்.
  அதன்பின்னர், மூவரையும் நிழற்படம் எடுத்து கணினி வழியாக பதிவேற்றப்படும். இதன் மூலம் குறிப்பிட்ட குழந்தையின் தாய் மற்றும் அவரது உறவினர் யார் என்ற அடையாளம் தெளிவாக மின்னணு முறையில் பதிவு செய்யப்படுகிறது. அதன் பின்னர் அந்தத் தகவல்கள் மகப்பேறு வார்டுகளின் வெளியே பொருத்தப்பட்டுள்ள ரேடியோ அலைக்கற்றை சாதனங்களுடன் இணைக்கப்படும்.
  ஒருவேளை வெளி நபர்கள் எவரேனும், குழந்தையை எடுத்துச் சென்றாலோ அல்லது கடத்தப்பட்டாலோ ரேடியோ அலைக்கற்றை சாதனம் எச்சரிக்கை ஒலியை எழுப்பும். அதுமட்டுமன்றி, அங்குள்ள திரையில் எவர் குழந்தையை எடுத்துச் செல்கிறார் என்பதும் தெரியும்.
  இந்த நடைமுறையானது மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை முயற்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அது வெற்றிகரமாக செயல்பட்டதையடுத்து பிற மருத்துவமனைகளுக்கும் அது விரிவுபடுத்தப்பட்டது.
  அந்த வரிசையில் தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சீமாங் பிரிவில் உள்ள இரு வாயில்களிலும் 4 ரேடியோ அலைக்கற்றை சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து, மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் வசந்தாமணி கூறியதாவது:
  கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மாதத்துக்கு சராசரியாக 600 குழந்தைகள் பிறக்கின்றன. மகப்பேறு பிரிவுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதால், இங்கு குழந்தை கடத்தல் சம்பவங்கள் எதுவும் நடைபெறுவதில்லை.
  இருந்தபோதிலும், பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai