பாஜகவுடனான கூட்டணிக்கு இதை நிபந்தனையாக வையுங்கள்: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் யோசனை 

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடனான கூட்டணிக்கு முதல்வர் பழனிசாமி நீட் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை நிபந்தனையாக வைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 
பாஜகவுடனான கூட்டணிக்கு இதை நிபந்தனையாக வையுங்கள்: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் யோசனை 


நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடனான கூட்டணிக்கு முதல்வர் பழனிசாமி நீட் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை நிபந்தனையாக வைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
"மத்திய பாஜக அரசு மற்றும் மாநில அதிமுக அரசுகளின் திட்டமிட்ட சதிச்செயலால், தமிழ்நாடு இளைஞர்களின் மருத்துவக் கனவு தொடர்ந்து பாழாகி வருவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவக் கல்வி மற்றும் முதுநிலை மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு விலக்கு அளிக்கும்படி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை வேண்டுமென்றே கிடப்பில் போட்டு வைத்திருக்கும் மத்திய பாஜக அரசின் வஞ்சகச் செயலை மறக்கவோ மன்னிக்கவோ முடியாதது. தமிழகத்தைப் பழிவாங்கத் துடிக்கும் இந்த வக்கிர மனப்பான்மையால், தமிழ்நாடு மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு - நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துக் கல்வி குறுக்குவழியில் அநியாயமாக தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் “நீட் தேர்விலிருந்து” விலக்கு கிடைக்கும் என்று காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்துப் போன மாணவர்கள் மருத்துவராகும் கனவும் சிதைந்து - இன்றைக்கு கிராம மக்களின் சுகாதார தேவைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கோரி 18.02.2017 அன்று மாநில ஆளுனரால் அனுப்பி வைக்கப்பட்ட அந்த இரு மசோதாக்களின் கதி என்னவென்று இன்றுவரை தெரியவில்லை. குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கே அனுப்பப்படாமல் தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் அந்த மசோதாக்களை மத்திய பாஜக அரசு குப்பைத் தொட்டியில் வீசி அவமானப்படுத்தியிருக்கிறது. அதை தட்டிக்கேட்க முதுகெலும்பு இல்லாமல் கூனிக்குறுகி நிற்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுக அரசு, “கமிஷன், கரெப்ஷன், கலெக்ஷன்” என்பதிலேயே கவனமாக இருக்கிறது. இதன் விளைவாக தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள நீட் பாதிப்பு சொல்லி மாளாத நெடுந்துயரமாகி இருக்கிறது.

2014 -15 முதல் 2016 -17 வரை 22 முதல் 33-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த நிலை மாறி, வெறும் நான்கு மாணவர்கள் மட்டும் 2017-18ல் சேரும் அவலம் ஏற்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 59 பேர் சேர்ந்து வந்த நிலை தலைகீழாகி, மூன்று பேர் மட்டும் சேரும் இழிநிலை ஏற்பட்டு விட்டது. தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 2200 மாணவர்களுக்கு மேல் ஒவ்வொரு வருடமும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தார்கள். ஆனால், நீட் தேர்வால் 2017 - 18-ல் வெறும் 20 என்று அடியோடு குறைந்துள்ளது.

அதே நேரத்தில் மத்திய பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.இ) படித்த மாணவர்கள் 2016-17-ல் 14 பேர் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தார்கள். ஆனால் நீட் தேர்விற்குப் பிறகு 2017 - 18-ல் 611 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள். ஆகவே, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளுக்குள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டுள்ளார்கள்.

இதேபோல் தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளை எடுத்துக் கொண்டால் 2014 - 15 முதல் 2016 -17 வரை அரசு பள்ளிகளில் படித்த 3 முதல் 12 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தார்கள். ஆனால், 2017-18-ல் ஒரேயொரு மாணவர் மட்டும்தான் சேர்ந்திருக்கிறார் என்றால் நீட் தேர்வு எத்தகைய கேட்டினை மாணவச் சமுதாயத்தின் மீது திணித்துள்ளது? தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் இதே காலகட்டத்தில் 657 முதல் 1173 மாணவர்கள் வரை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள். நீட் தேர்வால் 2017 - 18ல் இந்த எண்ணிக்கை வெறும் 3 ஆகக் குறைந்து விட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்த சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இந்த காலகட்டத்தில் 2 முதல் 21 வரை மட்டுமே இருந்தது. ஆனால் 2017-18ல் இந்த எண்ணிக்கை 283 ஆக உயர்ந்துள்ளது. 

ஆகவே அரசு பள்ளிகளில் படித்தாலும், தனியார் பள்ளிகளில் படித்தாலும் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துக் கனவை “நீட் தேர்வு” என்ற கொடூர அரக்கன் கொன்று புதைத்திருக்கிறது.

கடந்த கால முடிவுகளை அலசிப் பார்த்தால், நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் படு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அனிதா உள்ளிட்ட பல மாணவியர், பெற்றோர்கள் தங்கள் உயிரைப் பறி கொடுத்தும், நீட் தேர்வுக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்க வக்கில்லாத மத்திய பாஜக அரசோ- அதற்கு அடிமையாக இருக்கும் அதிமுக அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராமப்புற மக்களைக் காப்பாற்றுவதற்குக் கூட மருத்துவர்கள் இல்லாத பேரபாயம் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பே ஒட்டுமொத்தமாகச் சரிந்து விழும் மிகப்பெரிய ஆபத்தை “நீட் தேர்வு” ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே தேர்தல் காலத்தில் சுய ஆதாயத்திற்காக எத்தனையோ அறிவிப்புகளை வெளியிடும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மாணவர்கள் நலன் கருதி, “நீட் தேர்விலிருந்து” விலக்களிக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற வேண்டும். அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்து விட்டு - நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராகிக் கொண்டிருக்கும் முத்வர்ர் எடப்பாடி பழனிசாமி இப்போதாவது - நீட் மசோதாக்களுக்கு ஒப்புதலை அளிக்க வேண்டும் என்பதை கூட்டணிக்கான நிபந்தனையாக முன்வைத்து, மத்திய பாஜக அரசை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com