சுடச்சுட

  

  புறநோயாளிகள் சிகிச்சையைப் புறக்கணித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டம்

  By DIN  |   Published on : 06th February 2019 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புற நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதைப் புறக்கணித்து அண்மையில் போராட்டம் நடத்திய அரசு மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
  அதன்படி, அன்றைய தினத்தில் எந்தெந்த மருத்துவர் பணிக்கு வரவில்லை என்பது குறித்த விவரங்கள் மருத்துவமனை வாரியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. மகப்பேறு, உடல்நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களுக்காக முன்கூட்டியே அனுமதி பெற்று விடுப்பில் சென்றவர்களுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும், அதேவேளையில் வேண்டுமென்றே பணிக்கு வராத மருத்துவர்கள் அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கு உரிய பதில் அளிக்காதபட்சத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
  காலமுறை ஊதியமும், பிற மாநிலங்களுக்கு நிகராக ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என்பது தமிழக அரசு மருத்துவர்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது. அதுதொடர்பாக ஆய்வு செய்ய அரசு தரப்பில் குழு அமைக்கப்பட்டதாகவும், அக்குழு அளித்த பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை என்பதும் அவர்கள் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு.
  இந்தச் சூழலில், அக்கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்கள் சார்பில் புற நோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்புப் போராட்டம் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்றது.
  அதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மாநிலம் முழுவதும் பங்கேற்றனர். காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மருத்துவ சேவைகளில் அவர்கள் ஈடுபடவில்லை.
  இந்தப் போராட்டத்தால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
  மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமாகவே இருந்தாலும், அதற்காக மக்களை பாதிக்கும் வகையில் எதிர்ப்பை வெளிப்படுத்துவது சரியல்ல என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.
  இதனிடையே, அதற்கு அடுத்தகட்டமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு மருத்துவர்கள் ஈடுபடத் திட்டமிட்ட நிலையில், அதில் உயர் நீதிமன்றம் தலையிட்டு ஆட்சேபம் தெரிவித்தது. இதையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டிய நிலை அரசு மருத்துவர்களுக்கு ஏற்பட்டது.
  இந்நிலையில்தான், இதுபோன்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு மருத்துவர்களுக்கு கடிவாளமிடும் வகையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
  அதன்படி, புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்த மருத்துவர்களின் விவரங்களை அனைத்து மாவட்ட சுகாதார தலைமை அதிகாரிகளிடமும் அரசு கேட்டுள்ளது. அவை மின்னஞ்சல் வாயிலாக சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அனைத்து தகவல்களும் கிடைத்த பிறகு அதன்பேரில் சுகாதாரத் துறை உயரதிகாரிகள் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai