சுடச்சுட

  

  சின்னத்தம்பி' முடிவெடுக்க முடியாமல் திணறும் வனத் துறை

  By DIN  |   Published on : 07th February 2019 12:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  elephant

  திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த மைவாடி பகுதியில் 5 நாள்களுக்கும் மேலாக முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானையை வனத்துக்குள் விரட்டுவது தொடர்பாக முடிவெடுக்க முடியாமல்  வனத் துறை திணறி வருகிறது.
  கோவை மாவட்டம்,  மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய தடாகம் உள்ளிட்ட கிராமங்களில் விளை நிலங்களில் புகுந்து அங்குள்ள பயிர்களை உண்டும், சேதப்படுத்தியும் வந்த விநாயகன், சின்னத்தம்பி என்று அழைக்கப்படும் இரண்டு யானைகள் வனத் துறையினரால் பிடிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டன.
  விநாயகன் யானை முதுமலை வனப் பகுதியிலும், சின்னத்தம்பி யானை கடந்த ஜனவரி 25-ஆம் தேதி பிடிக்கப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்தின் டாப்சிலிப் வனப் பகுதியிலும் விடப்பட்டன.
  இந்நிலையில், சின்னத்தம்பி யானை டாப்சிலிப் வனப் பகுதியில் இருந்து கடந்த ஜனவரி 31-ஆம் தேதி பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சி கிராமத்துக்குள் நுழைந்தது.  மேலும், அங்கிருந்து 100 கி.மீட்டருக்கும் மேல் நடந்து தற்போது உடுமலையை அடுத்த மைவாடி அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்துக்குள் முகாமிட்டுள்ளது. இந்த யானையைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் கலீம், மாரியப்பன் என்ற இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 60-க்கும் மேற்பட்ட வனம், காவல், வருவாய்த் துறையினர் அங்கு 5 நாள்களுக்கும் மேல் முகாமிட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
  விரைவில் முடிவெடுக்க வேண்டும்: உணவுக்காக நாளொன்றுக்கு 5 முதல்  10 கி.மீ. தூரம் இடம்பெயர்ந்து செல்லும் இயல்பு யானைகளுக்கு உள்ளதால், சின்னத்தம்பி அதே இடத்தில்தான் இருக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை. அவ்வாறு வெளியே வரும் நிலையில், அதன் வழியில் குறுக்கீடு, தொந்தரவு இருக்கும்பட்சத்தில் சின்னத்தம்பி யானை தாக்குதலில் ஈடுபடவும் வாய்ப்புள்ளதாக வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
  மேலும், சின்னத்தம்பி தற்போது உள்ள மைவாடி பகுதியில் இருந்து வனப் பகுதிக்குள் செல்ல வேண்டுமானால் கிட்டத்தட்ட 10 கிராமங்களைக் கடந்து 20 கி.மீ. தொலைவில் அமராவதி அணை அருகே உள்ள கல்லாபுரத்துக்குத்தான் செல்ல வேண்டும். எனவே, கும்கிகளைக் கொண்டு சின்னத்தம்பியை கல்லாபுரம் வனப் பகுதிக்குள் விரட்டுவதா அல்லது மயக்க ஊசி போட்டு பிடித்து வேறு வனப் பகுதிக்குள் விடுவதா என்பது குறித்து எந்தவொரு முடிவும் எடுக்காமல் திணறி வருகிறது. எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் இதுதொடர்பாக வனத் துறை விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்பதே வன ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
  தொடர் வனப் பகுதியில் விட வேண்டும்: இதுகுறித்து யானைகள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், நீண்ட காலமாக விவசாயப் பயிர்களை உண்டு வந்ததாலும், மனிதர்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாலும் சின்னத்தம்பி யானை, தற்போது முகாமிட்டுள்ள சூழலுக்கு தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது. சின்னத்தம்பியை நீண்ட நாள்களுக்கு இப்பகுதியிலேயே வைத்து அதற்கு உணவளித்தால், அதன் அடிப்படை பண்பில் பாதிப்பு ஏற்படும்.
  சின்னத்தம்பியை சரியான வனத் தொடர்பு இல்லாத ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்குள் விடுவதால் அது மீண்டும் விளைநிலங்களைத் தேடி வர வாய்ப்புள்ளது. எனவே, முதுமலை, பந்திப்பூர், சாம்ராஜ்நகர், வயநாடு, நாகரகொலே ஆகிய தொடர் வனப் பகுதி கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் மங்கலப்பட்டி வனப் பகுதியில் சின்னத்தம்பியை விட வேண்டும். அவ்வாறுவிடும் பட்சத்தில் சின்னத்தம்பி யானை மீண்டும் விளை நிலங்களை நோக்கி வருவது தடுக்கப்படும் என்றார்.
  குழு அமைப்பு: இதுகுறித்து முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மல்லேசப்பா கூறுகையில், சின்னத்தம்பி யானை தொடர்பாக வன ஆராய்ச்சியாளர்கள், அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். அவர்கள் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தவுடன் அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai