சுடச்சுட

  
  stanly


  சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை முறை வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
   வயது முதிர்வு, நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் முகப்பொலிவின்றி சுருக்கத்துடன் காணப்படுபவர்களுக்கு அடித்தோல் நிரப்பி (டெர்மல் ஃபில்லர்) என்ற அதிநவீன சிறப்பு சிகிச்சை முறை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.  இந்த நவீன சிகிச்சை முறை குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சோ.பொன்னம்பலம் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியது:
   தமிழகத்திலேயே அரசு ஸ்டான்லி மருத்துவமனையில்தான் அழகியலுக்கென தனித்துறை கடந்த 2013-ம் ஆண்டு முதல் முறையாகச் தொடங்கப்பட்டது.  இதனையடுத்து கடந்த ஆறு ஆண்டுகளாக இத்துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 
  இங்கு வெண்புள்ளி, முகப்பரு, முடி உதிர்வதைத் தடுத்தல்,  முடி மாற்று,  தழும்பு நீக்குதல், பச்சைக்குத்து நீக்குதல்  உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   மேலும் தமிழகம் அளவில்  இங்கு மட்டுமே தோல் வங்கி உள்ளது.  இவ்வங்கியில் 44 மனித உடல்களின் தோல்களை பதப்படுத்தப்பட்டு சுமார் 15 நோயாளிகளுக்கு தோல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
    இந்நிலையில் அழகியல் துறையில் முகத்தில் தோல் சுருக்கத்தை நீக்கி பொலிவான தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக அடித்தோல் நிரப்பி (டெர்மல் ஃபில்லர்) என்ற புதிய சிகிச்சை முறை வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே தனியார் மருத்துவமனையில் கிடைக்கும் இச்சிறப்பு சிகிச்சை ஏழை எளிய மக்களுக்கும் கைகூடும் வகையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இச்சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.   இச்சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை செலவாகும். ஆனால், ஸ்டான்லியில் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது என்றார் பொன்னம்பலம் நமச்சிவாயம்.
  பேட்டியின்போது அழகியல் துறை தலைவர் டாக்டர் மணிமேகலை, உறைவிட மருத்துவ அதிகாரி ரமேஷ், சர்க்கரை நோய் துறை தலைவர் டாக்டர் சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai