ஆந்திர விவசாயிகளுக்காக திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கும் வர வாய்ப்பு

ஆந்திர விவசாயிகளின் தேவைக்காக கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் சனிக்கிழமை இரவு பூண்டி ஏரிக்கு வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஆந்திர விவசாயிகளின் தேவைக்காக கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் சனிக்கிழமை இரவு பூண்டி ஏரிக்கு வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையின் குடிநீர்த் தேவைக்காக தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும் 2 கட்டங்களாக கண்டலேறு அணையில் இருந்து, கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு திறந்து விடுகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டு
நவம்பர் 1-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான பூண்டி,  புழல்,  சோழவரம்,  செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 
இவற்றின் மொத்தக் கொள்ளளவு 11,257 மில்லியன் கன அடி ஆகும்.  இதில் வியாழக்கிழமை நிலவரப்படி 938 மில்லியன் கன அடி மட்டுமே இருப்பில் உள்ளது. இதைக் கொண்டு இன்னும் ஒரு மாதத்துக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியும். இதையடுத்து மாற்று வழியில் தண்ணீரைப் பெறும் நடவடிக்கையை குடிநீர் வாரிய அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஜன. 9-ஆம்  தேதி ஹைதராபாதில் நடைபெற்ற கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரியக் கூட்டத்தில் தமிழக பொதுப் பணித்துறை உயரதிகாரிகள் கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி வேண்டுகோள் விடுத்தனர். இதே போன்று  தண்ணீரின்றிக் கருகி வரும் நெற்பயிர்களைக் காப்பாற்ற தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்படி ஆந்திர விவசாயிகளும், ஆந்திர அரசுக்குக் கோரிக்கை விடுத்து இருந்தனர். 
கூடுதல் தண்ணீர் திறப்பு:  இந்தநிலையில்  கண்டலேறு அணையில் இருந்து, கிருஷ்ணா கால்வாயில் கடந்த வாரம் முதல் தண்ணீர் திறந்துவிடுகிறது ஆந்திர அரசு. தொடக்கத்தில் விநாடிக்கு 300 கன அடி என திறக்கப்பட்ட நீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு  புதன்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 1,000 கன அடியாக உயர்ந்தது.  
இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை கூடுதலாக 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.  தற்போது கிருஷ்ணா நதி கால்வாயில் விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.
1 டிஎம்சி அளவுக்கு... ஆந்திர விவசாயிகள் சாகுபடி செய்ய தண்ணீர் எடுத்த பின்னர் தமிழக எல்லைக்கு கிருஷ்ணா தண்ணீர் வர உள்ளது. கூடுதலாக திறக்கப்பட்டு உள்ளதால் இன்னும் 3 நாள்களில் தமிழக எல்லையை கிருஷ்ணா தண்ணீர் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் செல்லும்.  
இதன் மூலம் ஒரு டிஎம்சி அளவுக்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்தத் தண்ணீர் கிடைத்தால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு சென்னைக்குக் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பிருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com