ரூ.5 கோடி உபகரணங்கள் கொள்முதலுக்கு ஒரே ஒரு ஒப்பந்தப் புள்ளி: சென்னைப் பல்கலை. அனுமதித்ததால் பேராசிரியர்கள் எதிர்ப்பு

சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு ரூ. 4.88 கோடி மதிப்பிலான ஆராய்ச்சி உபகரணங்கள் கொள்முதலுக்கு வந்த ஒரே ஒரு ஒப்பந்தப் புள்ளிக்கு சென்னைப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்திருப்பதற்கு பேராசிரியர்கள்


சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு ரூ. 4.88 கோடி மதிப்பிலான ஆராய்ச்சி உபகரணங்கள் கொள்முதலுக்கு வந்த ஒரே ஒரு ஒப்பந்தப் புள்ளிக்கு சென்னைப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்திருப்பதற்கு பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 
பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை, ஒப்பந்தம் கோரும் நடைமுறையையே அர்த்தம் இல்லாததாக்கும் செயல் எனவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
 மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் பல்கலைக்கழக அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 4.88 கோடிக்கு ஆராய்ச்சி உபகரணம் கொள்முதல் செய்ய பல்கலைக்கழகத்தின் சார்பில் அண்மையில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டது. இதற்கு, ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப் புள்ளியைச் சமர்ப்பித்துள்ளது.
இதை ஏற்றுக்கொண்ட பல்கலைக்கழகம், அந்த நிறுவனத்துக்கே கொள்முதல் ஒப்பந்த  உத்தரவையும் அளித்துள்ளது. இதற்கு பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்சிக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர்கள் கூறுகையில், ஒரு பணியை ஒப்பந்தம் விடுவது என்பது, பல நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டு, அவற்றில் குறைந்த ஒப்பந்தப் புள்ளியைக் குறிப்பிட்டுள்ள நிறுவனத்துக்கு பணியை  ஒதுக்குவது என்பதுதான் நடைமுறை. ஆனால், சென்னைப் பல்கலைக்கழகம் இப்போது இந்த ஒப்பந்த நடைமுறையையே அர்த்தமில்லாதது ஆக்கியுள்ளது. ரூ. 4.88 கோடி மதிப்பிலான உபகரணங்கள் கொள்முதலை, தனக்கு வேண்டப்பட்ட நிறுவனத்துக்கு கொடுக்கும் முயற்சிதான் இது. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், ஆட்சிக் குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் புதிதாக ஒப்பந்தப் புள்ளிகள் கோர வேண்டும் என்றனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்  துரைசாமி கூறியது:
பல்கலைக்கழகம் கொள்முதல் செய்யும் ஆராய்ச்சி உபகரணம்  தனிச் சிறப்பு மிக்கது என்பதால்தான், ஒரே ஒரு நிறுவனம் ஒப்பந்தப் புள்ளி சமர்ப்பித்தது. மேலும், மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை விதிகளின்படி, இதுபோல ஒரே ஒரு நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பித்திருக்கும்போது, அதை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக நிபுணர்களின் ஆலோசனையோடு முடிவு செய்வது அவசியம். அதனடிப்படையில், இந்த ஒப்பந்தப் புள்ளி தொடர்பாக சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒதுக்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இவ்வாறு தாக்கல் செய்யப்படும் ஒரே ஒரு ஒப்பந்தப் புள்ளி நிறுவனத்துக்கு, பணியை ஒதுக்கக்கூடாது என பல்கலைக்கழக விதியிலும் கூறப்படவில்லை. எனவே, விதிகளின் அடப்படையில் முறைப்படி இந்த ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது  என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com