இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம்: தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் சொல்லும் சேதி 

பா.ஜ.க அரசின் முயற்சிக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் தமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்தாவிட்டால், ஒரு மிக மோசமான "வரலாற்றுப் பிழையை" செய்துவிட்ட ஒரு கருப்பு அத்தியாயம்... 
இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம்: தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் சொல்லும் சேதி 

சென்னை: பா.ஜ.க அரசின் முயற்சிக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் தமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்தாவிட்டால், ஒரு மிக மோசமான "வரலாற்றுப் பிழையை" செய்துவிட்ட ஒரு கருப்பு அத்தியாயம் இந்தியத் தேர்தல் வரலாற்றில் எழுதப்பட்டு விடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அ.தி.மு.க வுடன் கூட்டணி வைப்பதற்காக தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த விடாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று, எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற தவியாய்த் தவித்து அங்குமிங்கும் அலையும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க அரசு வாக்குறுதி அளித்து இருப்பதாக வரும் பத்திரிகைச் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

18 சட்டமன்றத் தொகுதிகள் காலியாகி, ஏறக்குறைய 15 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இப்போது வருகின்ற மக்களவைத் தேர்தலுடனும் அதற்கு இடைத்தேர்தல் நடத்த மாட்டோம் என்று மத்திய பா.ஜ.க அரசு திரைமறைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாக்குறுதி அளித்திருப்பதாக வரும் செய்திகள், அரசியல் சட்டத்தின்படி அமைந்துள்ள தேர்தல் ஆணையத்தை கேவலப்படுத்தி மிகவும் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது. 

அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணையை மத்திய அரசு முடக்கி வைத்தது. ஊழல் டிஜிபி ஒருவர் பதவியில் நீடிக்க மத்திய அரசு நேரடியாக உதவிசெய்து ஒத்துழைக்கிறது. ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் என்ற வகையில், 84 கோடி ரூபாய் பணம் கொடுத்த வழக்கினை, யாருக்குமே தெரியாமல் ரகசியமாக “க்ளோஸ்” பண்ண வைத்து, அதைக் கண்டும் காணாமல் தேர்தல் ஆணையமும் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது.  ஊழலை ஒழித்துக் கட்டுவோம் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் வீராவேசமாகப் பேசிக்கொண்டே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரை டஜன் அமைச்சர்களை, ஊழல் விசாரணையிலிருந்து பா.ஜ.க அரசு தப்பிக்க வைத்தது. அரசுக்கு எதிராகவே வாக்களித்த திரு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை, தகுதி நீக்கம் செய்யாத அ.தி.மு.க அரசை இருகரமும் இணைத்து வாரியணைத்து பாசத்தைப் பொழிந்து, ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமாகக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.

சிறப்பு நீதிமன்றத்தால் மூன்று வருடம் சிறைத்தண்டனை பெற்ற பிறகும்' முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வெற்றி பெற்ற ஓசூர் தொகுதி தானாகவே காலியான நிலையிலும், அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்காமல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே உதாசீனப்படுத்துவதற்கு, தேர்தல் கமிஷனுக்கு மத்திய பா.ஜ.க அரசு இன்னமும் கடுமையான நிர்ப்பந்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசில் தேர்தல் ஆணையமும், அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அத்தனை அமைப்புகளும் பா.ஜ.கவின் “ப்ரைவேட் லிமிடெட்” கம்பெனி போல் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு நினைப்பது மிகவும் ஆபத்தான அரசமைப்புச் சட்ட பச்சைப் படுகொலை.

எடப்பாடி திரு. பழனிசாமி வைத்த "இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்" என்ற மக்கள் விரோதக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று மத்திய பா.ஜ.க அரசு நிர்ப்பந்தம் செய்வதாக வரும் செய்திகள், பாராளுமன்ற ஜனநாயகத்திற்கே வேட்டு வைக்கும் பயங்கரமாகும்.

அரசியல் சட்டத்தின்படி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட ஒரு பிரதமர் அந்தச் சட்டத்தையும், அது அமைத்துக் கொடுத்த தன்னாட்சி அமைப்புகளையும் ஒரு கட்சியின் பயன்பாட்டிற்காக - ஒரு கட்சியின் தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியது திரு நரேந்திர மோடிதான்!

ஆகவே, மத்திய பா.ஜ.க அரசின் நிர்ப்பந்தத்திற்கு ஆட்பட்டு விடாமல், தேர்தல் ஆணையம் தனக்கு இருக்கும் அரசியல் சட்ட சுதந்திரத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலை நடத்தி, ஜனநாயக மானை சர்வாதிகார வேங்கையிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பா.ஜ.க அரசின் வற்புறுத்தலுக்குப் பணிந்தால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல் ஆணையம், ஒரு மிக மோசமான "வரலாற்றுப் பிழையை" செய்துவிட்ட  ஒரு கருப்பு அத்தியாயம் இந்தியத் தேர்தல் வரலாற்றில் எழுதப்பட்டு விடும் என்றும்; அது மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்றும்; எச்சரிக்க  விரும்புகிறேன்!

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com