மத்தியில் மோசடி ஆட்சி; மாநிலத்தில் கூலிப்படை ஆட்சி: திருமண விழாவில் கடுகடுத்த ஸ்டாலின் 

மத்தியில் மோசடி ஆட்சி; மாநிலத்தில் கூலிப்படை ஆட்சி என்று கட்சிப் பிரமுகர் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய மாநில அரசுகளை விமர்சித்துப் பேசினார்.
மத்தியில் மோசடி ஆட்சி; மாநிலத்தில் கூலிப்படை ஆட்சி: திருமண விழாவில் கடுகடுத்த ஸ்டாலின் 

ஓசூர்: மத்தியில் மோசடி ஆட்சி; மாநிலத்தில் கூலிப்படை ஆட்சி என்று கட்சிப் பிரமுகர் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய மாநில அரசுகளை விமர்சித்துப் பேசினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ஞாயிறன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தளி பிரகாஷ் எம்.எல்.ஏ இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:

இன்று ஒரு முக்கியமான நாள். வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள். அது என்னவென்று கேட்டால் அறிஞர் அண்ணா அவர்கள் 1967ல் ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் தான் நம்மிடத்தில் வாழ்ந்து, அவரின் மறைவிற்குப் பின்னால் 1969 பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் முதன்முதலாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற நாள். இந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தான். கணக்குப்போட்டுப் பார்த்தால் 50 ஆண்டுகாலம் முடிந்திருக்கின்றது. அப்படிப்பட்ட தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்று 50 ஆண்டு காலம் நிறைவடைந்திருக்கும் இந்த சிறப்பிற்குரிய நாளில் மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் பெற்று அவர்கள் சிறப்போடு வாழ்ந்திட வேண்டும் என்று நான் உங்கள் சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் வாழ்த்துவதற்கு கடமைப்பட்டிருக்கின்றேன்.

நான் இப்பொழுது சொல்லுகின்றேன், விரைவில் நாம் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றோம். நாடாளுமன்றத் தேர்தல் எப்படியும் வந்தே தீரும் 5 ஆண்டுகாலம் முடியப்போகின்றது. இந்த மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்திலோ தேர்தல் தேதி அறிவிக்கப்படவிருக்கின்றது.

அப்படி அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு எப்படியும் ஏப்ரல், மே மாதத்தில் இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களிலும், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்று மே மாதம் ஒரு புதிய ஆட்சி மத்தியில், நிச்சயமாக உறுதியாக மோடியின் ஆட்சி அகற்றப்பட்டு நாம் விரும்பக்கூடிய உருவாகப் போகிறது. ஒரு சிறப்பான ஆட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முழு ஒத்துழைப்போடு முழு ஆதரவோடு அமையக்கூடிய ஆட்சிதான் மத்தியில் உறுதியாக அமையப்போகின்றது. அப்படி அமைகின்ற நேரத்தில் இருக்கக்கூடிய பிரச்னைகள், குறைபாடுகள் எல்லாம் தீர்த்து வைக்கக்கூடிய நிலை உருவாகப் போகின்றது.

நீங்கள் நினைக்கலாம், வெறும் நாடாளுமன்றத் தேர்தலை மட்டும் சொல்கின்றானே, ஏற்கனவே, தமிழ்நாட்டில் 18 சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏக்கள் பதவி பறிக்கப்பட்டிருக்கின்றது. பறிக்கப்பட்ட எம்.எல்.ஏ பதவியின் தேர்தல் 6 மாதத்திற்குள்ளாக வைத்தாக வேண்டும். 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 18ம் நாள் எம்.எல்.ஏக்களின் பதவி பறிக்கப்பட்டது. ஆறு மாதத்திற்குள் தேர்தல் வைக்க வேண்டும். ஆனால், 15 மாதங்கள் ஆகிவிட்டது. 18 தொகுதிகளில் இருந்த எம்.எல்.ஏக்களின் பதவி ஏன் பறிக்கப்பட்டது என்றால், நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட எதிர்த்து வாக்களிக்கவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு எதிராக கவர்னரிடத்தில் முதலமைச்சரை மாற்ற வேண்டும், எங்களுக்கு இவர் மீது நம்பிக்கை இல்லையென்று மனு கொடுத்தார்கள், அதனால் இவர்கள் நீக்கப்பட்டார்கள். அதனால் தான் இவர்களின் ஆட்சியே நீடித்து வருகிறது.

இதில் என்ன வேடிக்கை என்றால், எதிர்த்து ஓட்டு போட்டவர்கள் யார் தெரியுமா? துணை முதலமைச்சராக இருக்கின்ற ஓ.பன்னீர் செல்வம் அவரோடு சேர்த்த 11 பேர். அவர்கள் பதவி நீக்கப்படவில்லை. இந்த ஆட்சியே இருக்கக்கூடாது என ஓட்டு போட்டவர்கள். இன்னும் 10 நாட்களில் தீர்ப்பு வரப்போகிறது. நிச்சயமாக, இவர்களின் பதவியும் பறிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இங்கிருப்பவர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் க்கும் நல்லாத் தெரியும். அப்படி ஒரு நிலை வருகிற போது, இந்த ஆட்சி நீடிக்க வாய்ப்பில்லை.

இந்த 18 தொகுதி மட்டுமல்ல, மேலும் 3 தொகுதி. திருவாரூர், திருப்பரங்குன்றம். மூன்றாவது இந்த தொகுதி, உங்கள் ஓசூர் தொகுதி. இங்கு எதற்கு காலியானது என உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இன்னும் இந்தத் தொகுதி காலியானது என அறிவிப்பு வரவில்லை. நியாயமாக சபாநாயகர் தேர்தல் கமிஷனுக்கு எழுதி அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அவர் என்ன சொல்கிறார் என்றால், உயர் நீதிமன்றத்தில் இருந்து இன்னும் தாக்கீது வரவில்லை என்கிறார். நாங்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு உயர் நீதிமன்றத்தை அணுகினோம். அவர்கள் அனுப்பி விட்டோம் என்கிறார்கள். இரண்டு நாள் பொறுத்திருப்போம். வரவில்லை என்றால், வழக்கை மதிக்கவில்லை என உங்கள் மீது வழக்குப் போடுவோம் என்றும் நான் சொல்லியிருக்கிறேன்.

நியாயமாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்துகிற நேரத்தில், இந்த 21 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தலை நடத்தியாக வேண்டும். ஆனால் எனக்கு வந்துகொண்டிருக்கிற செய்திகள் என்னவென்றால், பா.ஜ.கவும் அ.தி.மு.க வும் கூட்டணி வைப்பதற்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் இவர்கள் கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஒருவேளை கூட்டணி வைத்தால் டெபாசிட் காலியாகி விடும் என ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், மோடி இவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார். நீங்கள் தோற்பீர்களோ? ஜெயிப்பீர்களோ? எங்களுடன் கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால், ஐ.டி ரெய்டு. ஆதாரங்கள் கையில் இருக்கிறது. குட்கா ஆதாரம், எடப்பாடி பழனிசாமி ஊழல் ஆதாரம் எல்லாம் இருக்கிறது. 11 எம்.எல்.ஏக்கள் வழக்கு இருக்கிறது. இதையெல்லாம் வைத்து பழி வாங்கி விடுவோம் என மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த மிரட்டலுக்கு பயந்து அ.தி.மு.க தயாராகி விட்டது. இந்நிலையில் இவர்கள் ஒரு நிபந்தனை வைத்திருக்கிறார்கள். என்னவென்றால், இந்த 21 தொகுதிகளுக்கு தேர்தல் வேண்டாம். வைத்தால் நாங்கள் தேற மாட்டோம். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்று கொஞ்ச நாளைக்காவது நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம் எனக் கேட்டிருக்கிறார்கள். நிச்சயமாக சட்டமன்ற பொதுத் தேர்தல் வருகிற போது எங்கும் நாங்கள் வெற்றிபெற முடியாது, ஏன் டெபாசிட் கூட வாங்க முடியாது, எனவே இருக்கிற வரைக்கும் அனுபவித்து போகிறோம் என ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை.

நான் இப்போது சொல்கிறேன், இந்த 21 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தாமல் இருந்தால், தமிழ்நாட்டில் இருக்கின்ற கட்சிகள் மட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கின்ற மக்களை ஒன்று திரட்டி ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்துகின்ற சூழல் நிச்சயம் ஏற்படும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஏற்கனவே, சி.பி.ஐ, ரிசர்வ் வங்கி என எல்லாவற்றையும் உங்களுக்கு பக்கபலமாக வைத்திருக்கிறீர்கள். உச்சநீதிமன்றத்தையே மிரட்டக் கூடிய வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்நிலையில் தேர்தல் ஆணையத்தையும் கூட வைத்துக் கொண்டு அநியாயத்துக்கு துணை போகிறீர்கள் என்பதால் தான் சொல்கிறேன் இந்த மோடி அரசு ஒரு மோசடி அரசு.

மத்தியில் மோசடி ஆட்சி என்றால், மாநிலத்தில் கூலிப்படை ஆட்சி. எடுபிடி ஆட்சி. கொலை செய்கிற கொள்ளையடிக்கின்ற ஒரு ஆட்சி. இப்படிப்பட்ட ஆட்சியை விட்டு வைக்கலாமா? இவர்களை அகற்ற நீங்கள் தயாராக வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் சேர்த்து தேர்தல் வர வேண்டுமென நாங்கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உதயமாக வேண்டுமென்கிற உணர்வோடு இருக்கிறார்கள். அந்த உணர்வினை நிறைவேற்ற அனைவரும் தயாராகுங்கள், தயாராகுங்கள், தயாராகுங்கள் எனக் கேட்டு, மணக்கோலம் பூண்டிருக்கின்ற மணமக்கள் வாழ்வில் எல்லா நன்மைகளையும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்தி விடைபெறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com