மோடி தோற்றுவிடுவார் என்றால் எதற்காக மெகா கூட்டணியை அமைத்தீர்கள்? திருப்பூரில் பிரதமர் கேள்வி

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று சிறப்புரையாற்றினார். 
மோடி தோற்றுவிடுவார் என்றால் எதற்காக மெகா கூட்டணியை அமைத்தீர்கள்? திருப்பூரில் பிரதமர் கேள்வி

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது விவசாயிகள் சார்பில் பிரதமர் மோடிக்கு வெள்ளி தேங்காய் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

கயிலாயம், நொய்யல், அமராவதி உள்ள புண்ணிய பூமியில் உள்ள தமிழர்களுக்கு வணக்கம். தொழில்முனைவோர் பின்னலாடை தொழில் நடக்கும் திருப்பூர், நாட்டிற்கு உதாரணமாக திகழ்கிறது. துணிச்சலுக்கான, தைரியத்துக்கான மண் திருப்பூர் மண், அர்ப்பணிப்பு நிறைந்த மக்கள் நிறைந்த மண்.

திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை உள்ளிட்டோர் சார்ந்த பூமி இது. நமோ டீசர்ட் மற்றும் தொப்பி உள்ளிட்டவை திருப்பூர் மண்ணில் இருந்து தான் உற்பத்தி ஆகின்றன. கடல் முதல் வானம் வரை ஊழல் செய்தவர்கள் முந்தைய காங்கிரஸ் கட்சியினர். இன்று ஊழலோடு தொடர்புடையதாக கைதாகும் ஒவ்வொருவரும் யாரோ ஒரு தலைவரோடு தொடர்புள்ளவர்கள்.

நாட்டின்பாதுகாப்புத்துறை முன்னேற்றம் குறித்து காங்கிரஸ் அரசு எந்த அக்கறையும் செலுத்தவில்லை. பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற மத்திய அரசு முயன்று வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தான் ராணுவத்தை நவீன மயமாக்கினோம். தமிழகத்தில் ஒரு ராணுவ தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக்கப்பட்டுள்ளது.

நமது ராணுவத்தின் துல்லியத் தாக்குதலை காங்கிரஸ் கொச்சைப்படுத்தியது. ராணுவத்தை இழிவுபடுத்தவும், சிறுமைப்படுத்தவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்; 40 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசு ராணுவ வீரர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. ஒரு பதவி ஒரு ஓய்வு ஊதியம் திட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. வரும் தலைமுறையினருக்காக சிறப்பான திட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம், ஒவ்வொரு இந்தியனுக்குமான அரசாங்கம்.

நான்கரை ஆண்டுகால ஆட்சியில், அனைவருக்கும் வீடு திட்டத்தில் 1 கோடியே 30 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டிருக்கின்றன. மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் 11 லட்சம் பேர் பயன் பெற்றிருக்கிறார்கள். நாட்டின் ஒவ்வொரு கடைக்கோடியையும் சாலைகள் மூலம் இணைத்து வருகிறோம்.

நடுத்தர வர்க்கத்தினருக்கு பட்ஜெட்டில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்துவிட்டால் மட்டும் அவர்களின் துயரம் தீராது. நலிவடைந்த விவசாயிகளை பாதுகாக்க பாஜக அரசு ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்குகிறது. இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்களால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

அனைவருக்கும் சமமான வாய்ப்பு தர வேண்டுமென்ற நோக்கில் தான் 10% இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. 10% இட ஒதுக்கீட்டால் பிற இடஒதுக்கீடுகள் எந்த வகையிலும் பாதிக்காது என உறுதி அளிக்கிறேன். காங்கிரஸ், திமுக கூட்டணியில் தான் இட ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காமராஜர் விரும்பிய வகையில் ஊழலற்ற ஆட்சியாக பாஜக அரசு நடந்துகொண்டிருக்கிறது. விவசாயம், மீனவர்கள் பற்றி கவலைப்படும் ஆட்சி பாஜக ஆட்சி, மீன்வளத்திற்கென்று தனி அமைச்சகம் உருவாக்கப்படும். விவசாயிகள் மற்றும் இளைஞர்களை திசைத்திருப்பும் பணியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளனர்.

மோடியை வசைப்பாடுவதையே எதிர்க்கட்சிகள் பிழைப்பாக கொண்டிருக்கிறார்கள், மோடியை தோற்கடிக்க வேண்டும் என போராடி வருகின்றனர். வருத்தத்தில் இருக்கும் எதிர்க்கட்சிகள் எப்போதும் மோடி மோடி என பேசி வருகிறார்கள், எதைப்பற்றி கேட்டாலும் மோடி என்பார்கள்.

மோடி தோற்றுவிடுவார் என்றால் எதற்காக மெகா கூட்டணியை அமைத்தீர்கள். வாரிசு அரசியலை வளர்ப்பதும், குடும்பத்தினரை பாதுகாப்பதுமே எதிர்க்கட்சியின் திட்டம். எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கலப்பட கூட்டணியை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

தாம் ஒருவர் மட்டுமே அறிவாளி என இங்குள்ள மறு எண்ணிக்கை அமைச்சர் (ப.சிதம்பரம்) நினைக்கிறார். அதனால் தான் மக்கள் அவர்களை தோற்கடித்தார்கள், மீண்டும் மீண்டும் தோற்கடித்துக்கொண்டே இருப்பார்கள்.

மனதின் எண்ணத்துக்கு ஏற்றபடி மனிதனின் உயர்வு இருக்கும் என திருவள்ளுவர் கூறியுள்ளார். 'வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு' என்ற திருக்குறளுடன் தனது பேச்சை முடித்தார் பிரதமர் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com