சுடச்சுட

  

  ஆறுமுகசாமி ஆணையத்துக்குத் தடை கோரிய வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

  By DIN  |   Published on : 11th February 2019 11:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  arumugasamy


  சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தமிழக அரசும், ஆறுமுகசாமி ஆணையமும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

  ஆறுமுகசாமி ஆணையத்துக்குத் தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

  விசாரணையின் போது, அனைத்துத் தரப்பினருக்கும் உரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. உரிய முறையில்தான் நாங்கள் விசாரணை நடத்துகிறோம் என்று ஆறுமுகசாமி ஆணையம் வாதத்தை முன் வைத்தது.

  ஆறுமுகசாமி உரிய விசாரணை நடத்தவில்லை எனவும்,  ஆணையம் விசாரணை மட்டுமே நடத்த வேண்டும், குறுக்கு விசாரணை மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடத்தக் கூடாது என்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

  இதையடுத்து, அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்திருக்கும் மனு மீது தமிழக அரசும், ஆறுமுகசாமி ஆணையமும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  முன்னதாக,  ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த, 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது. 

  இந்த ஆணையத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு, அப்பல்லோ மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்தர்.

  இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் உண்மைத்தன்மை பற்றி விசாரணை நடத்த, ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி அப்பல்லோ நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

  அதில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க, மருத்துவ நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களை கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai