சுடச்சுட

  

  தமிழில் தொடங்கி குறள் பொருளுடன் முடித்த மோடி: திருப்பூர் பொதுக்கூட்ட துளிகள்

  By DIN  |   Published on : 11th February 2019 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  PM

  ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் பொதுக்கூட்டத்தை முடித்த பிரதமர் மோடி தனி விமானம் மூலமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவை வந்தடைந்தார்.
   கோவை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் மதியம் 2.35 மணி அளவில் புறப்பட்ட அவர் 3.10 மணி அளவில் பெருமாநல்லூர் வந்தடைந்தார்.
   அங்கு அவரை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வரவேற்றனர்.
   இதன் பிறகு கார் மூலமாக அருகில் இருந்த அரசு விழா மேடைக்குச் சென்றார். அங்கு திருப்பூர், சென்னை இ.எஸ்.ஐ.மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டுதல், சென்னை மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை காணொலிக் காட்சி மூலமாகத் தொடங்கிவைத்தார்.
   இதன் பிறகு 3.35 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு 3.42 மணி அளவில் வந்தடைந்தார். அவரை பாஜக நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும், ஆளுயர மாலையும் அணிவிக்கப்பட்டது.
   இதையடுத்து, விவசாயிகள் சார்பில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச விலையை உயர்த்தியதற்கு நன்றி தெரிவித்து வெள்ளித் தேங்காய் பரிசாக அளிக்கப்பட்டது.
   இதைத்தொடர்ந்து "என் இனிய தமிழ் சகோதர சகோதரிகளே... உங்கள் அனைவருக்கும் வணக்கம்' என்று தமிழில் பேசி தனது உரையைத் தொடங்கினார் மோடி. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர்.
   இதையடுத்து, மோடி ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவரது உரையை பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா தமிழில் மொழிபெயர்த்தார்.
   வெள்ளத்தனைய மலர்நீட்டம் என்ற திருக்குறளின் பொருளுடன் பேச்சை நிறைவு செய்தார்.
   கூட்டத்தில் 42 நிமிடம் பேசிய பிரதமர் அங்கிருந்து 4.30 மணி அளவில் கார் மூலமாக ஹெலிகாப்டர் தளத்துக்குச் சென்றார். இதன் பிறகு 4.40 மணி அளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு கோவை விமான நிலையம் திரும்பினார். பிரதமர் வருகையை ஒட்டி திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
   வாகன நெரிசல்: பிரதமரின் வருகையை ஒட்டி அரசு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் திரண்ட கட்சித் தொண்டர்களின் கூட்டத்தால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு செல்லும் அனைத்து நபர்களையும் கடும் சோதனைக்குப் பின்னரே போலீஸார் அனுமதித்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai