சுடச்சுட

  
  JALLI

  தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 4 போலீஸார் உள்பட 42 பேர் காயமடைந்தனர்.
   திருக்கானூர்பட்டி மாதா கோயில் தெருவில் புனித அந்தோணியார் பொங்கலையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
   இதைத்தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த ஏறத்தாழ 640 காளைகள் ஒவ்வொன்றாக விடப்பட்டன. சீறிப் பாய்ந்து வந்த காளைகளைப் பிடிக்க மொத்தம் சுமார் 300 பேர் களமிறங்கினர்.
   எல்லைக்கோடு வரை மாட்டைப் பிடித்து கொண்டு ஓடியவர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவித்து, அவர்களுக்கு சைக்கிள், பீரோ, கட்டில், சுவர் கடிகாரம், கைக்கடிகாரம், பட்டுச்சேலை போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுகள் பிடிபடவில்லை என்றால் மாட்டின் உரிமையாளருக்கு அப்பரிசுகள் அளிக்கப்பட்டன.
   இதனிடையே, வாடிவாசலில் இருந்து வெளியே வந்து ஓடி கடந்து சென்ற ஒரு காளை திடீரென திரும்பி வந்தது. அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் திராவிடமணி, செந்தில்வேலன், வினிதா, சுரேகா ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் தவிர, மாடு பிடிக்க முயன்ற வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் என மொத்தம் 38 பேர் காயமடைந்தனர். இவர்களில் காவலர்கள் உள்பட 8 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.
   முன்னதாக, மருத்துவக் குழுவினரின் பரிசோதனைகளுக்கு பிறகு தகுதியான மாடுபிடி வீரர்கள் மட்டுமே களத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல, மாடுகளை கால்நடைத் துறையினர் பரிசோதனை செய்தனர்.
   காலை 7.50 மணியளவில் தொடங்கிய இந்த போட்டி மாலை 4.45 மணியளவில் நிறைவடைந்தது. இதில், கோட்டாட்சியர் சி. சுரேஷ், தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜெ. லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   நிகழாண்டில் மாவட்டத்தில் நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai