சுடச்சுட

  

  மோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தத்திற்கு தேர்தல் ஆணையம் அடிபணிந்திடக் கூடாது: மார்க்சிஸ்ட் கட்சி 

  By DIN  |   Published on : 11th February 2019 04:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  k_balakrishnan1

   

  சென்னை: மோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து இடைத்தேர்தல்களை தள்ளி வைப்பதாக தேர்தல் ஆணையம் முடிவெடுத்து விடக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. 

  இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

  தங்களது ஊழல் முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் அவைகளுக்கு துணை போகும் மோடி அரசிடம் தமிழக நலன்களை காவு கொடுத்து அதிமுக அரசு சரணாகதி அடைந்துள்ளது மட்டுமன்றி, பாஜகவுடன் தேர்தல் உறவு கொள்ளவும் முனைந்துள்ளது.

  நாடு முழுவதும் மக்கள் விரோத கொள்கைகளாலும், இமாலய ஊழல்களாலும் தோல்வி பயத்தில் மூழ்கியுள்ள பாஜகவுடன் கூட்டு சேர்வதற்கு பிரதமர் மோடியிடம் அதிமுக சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தலோடு கடந்த 15 மாதங்களாக காலியாக உள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்களை நடத்தாமல் ஒத்தி வைக்க வேண்டுமென கோரியுள்ளதாகவும், அதை பிரதமர் பரிசீலிப்பதாகவும் அதிர்ச்சியான செய்திகள் தெரிவிக்கின்றன.

  தேர்தல் என்றாலே அதிமுக பயந்து நடுங்கி வருகிறது. தேர்தல்கள் நடந்தால் தங்களது வண்டவாளம் பகிரங்கமாகி விடும் என்பதால், உள்ளாட்சி மன்றத்தேர்தல்களை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சொத்தையான காரணங்களைக் கூறி தள்ளிப்போட்டு வருகிறது. இதனால் உள்ளாட்சி நிர்வாகங்கள் சீரழிந்து மக்கள் அடிப்படை தேவைகளுக்கு ஆலாய் பறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

  தற்போது 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடந்தால் அனைத்திலும் படுதோல்வி அடைவதுடன், அதன் மூலம் பதவி இழக்க நேரிடும் என்பதாலும், தொடர்ந்து பதவியைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்பதாலும் தேர்தலை ஒத்திப்போட எடப்பாடி அரசு முயற்சித்து வருகிறது என்பது தெளிவாகும். இதற்காகவே, மோடியை தமிழகத்திற்கு அழைத்து வந்து அதிமுக அரசு விழா எடுத்துள்ளது போலும்.

  தமிழகத்தில் 21 சட்டமன்றத் தொகுதிகளை காலியாக வைத்துக் கொண்டு அரசு நிர்வாகம் நடத்துவது வரலாற்றிலேயே முதன் முறை என்பது மட்டுமன்றி அரசியல் சாசனத்திற்கு விரோதமானதாகும். இத்தொகுதிகளில் உள்ள மக்களது பிரச்சனைகளை கவனிப்பதற்கு சட்டமன்றப்பிரதிநிதிகள் இல்லாமல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலையும் கட்டாயம் நடத்த வேண்டுமென அனைத்து எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும், சம்பந்தப்பட்ட தொகுதி வாக்காளப்பெருமக்களும் கோரி வருகின்றனர். ஆனால், எடப்பாடி அரசின் வற்புறுத்தல் காரணமாக மோடி அரசும் தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்த மறுத்து வருகின்றன.

  இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்ற இடைத்தேர்தல்களை நாடாளுமன்றத் தேர்தலோடு இணைத்து கட்டாயம் நடத்திட வேண்டும். மோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து இடைத்தேர்தல்களை தள்ளி வைப்பதாக முடிவெடுத்தால் அது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது மட்டுமன்றி தேர்தல் ஆணையத்தின் மீதான வரலாற்றுக்கரும்புள்ளியாக பதிவாகும் என்பது திண்ணம்.

  அரசியல் நெறிமுறைகளை தொடர்ந்து காலில் போட்டு மிதித்து வரும் மோடி அரசு, அரசியல் கூட்டணி லாபத்திற்காக இடைத்தேர்தல்களை தள்ளி வைக்க முயலுமானால் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுக்க தமிழக மக்களும், ஜனநாயக சக்திகளும், அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டுமென   மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai