சுடச்சுட

  

  மோடி வருகையைக் கண்டித்து மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: பாஜக பெண் நிர்வாகி கோஷமிட்டதால் பரபரப்பு

  By DIN  |   Published on : 11th February 2019 02:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  slogan

  பிரதமர் மோடியின் திருப்பூர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பாஜக பெண் நிர்வாகி ஒருவர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
   திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் அரசு விழா மற்றும் பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
   இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், குமரன் சிலை முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவர்கள் பிரதமரைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கருப்பு பலூன்களைப் பறக்கவிட்டனர்.
   கோஷமிட்ட பாஜக பெண் நிர்வாகி: ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசிக்கொண்டிருந்தபோது, பாஜக வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் சசிகலா கதிரேசன் என்பவர் அங்கு வந்து "பாரத் மாதா கி ஜெய்' என்று கோஷமிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மதிமுகவினர் அந்த பெண்ணைத் தாக்க முயன்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் அந்தப் பெண்ணை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
   பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர், சொந்தப் பிணையில் விடுவித்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
   கடையடைப்பு: திருப்பூர் ரயில்நிலையம் அருகில் மதிமுகவினர் சார்பில் கருப்புக் கொடி போராட்டம் அறிவித்திருந்ததால், அப்பகுதியில் சில கடைகள் மூடப்பட்டிருந்தன. மேலும், பாஜக நிர்வாகி ஒருவர் செருப்பு வீசியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai