தேர்தல் ஆணையத்தை எதிர்த்து போராட வேண்டிய நிலை வரும்: காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி  எச்சரிக்கை

தேர்தல் ஆணையத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் அணி திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி எச்சசரித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தை எதிர்த்து போராட வேண்டிய நிலை வரும்: காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி  எச்சரிக்கை

சென்னை: தேர்தல் ஆணையத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் அணி திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி எச்சசரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. வெற்றி பெற முடியாத அளவில் மக்கள் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த எதிர்ப்பை எப்படியாவது சரிகட்டுவதற்கு அ.தி.மு.க.வை கூட்டணியில் சேர்க்க பா.ஜ.க. திரைமறைவு  தந்திரங்களை செய்து வருகிறது. அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்தால் படுகுழியில் விழ நேரிடும் என எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ள முதலமைச்சர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக பா.ஜ.க.வோடு கூட்டணி அமைக்க பேரம் பேசி வருகிறார்கள். தமிழகத்தில் மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக - குறிப்பாக நரேந்திர மோடிக்கு எதிராக கடும் எதிர்ப்பு அலை வீசி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து நடத்தாமல் தள்ளி வைப்பதற்கு அ.இ.அ.தி.மு.க. தலைமை பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. கடந்த 15 மாதங்களாக சட்டமன்ற உறுப்பினர்களே இல்லாமல் அந்த தொகுதிகளில் மக்கள் குறைகளை கேட்க எவரும் நாதியில்லாத நிலை இருந்து வருகிறது. இந்த அவலநிலையில் இருந்து 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து நடத்திட வேண்டுமென்ற கோரிக்கை வலுவாக எழுப்பப்பட்டு வருகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மக்களாட்சி தழைத்தோங்க, தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், முறையான தேர்தல்கள் நடத்திட தன்னாட்சி பொருந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்தகைய அமைப்பு சமீபகாலமாக நரேந்திர மோடியின் கைப்பாவையாக மாறி வருவது அனைவரையும் கவலையில் ஆழ்த்தி வருகிறது. உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் 16 நாடாளுமன்றத் தேர்தல்களை மிகச் சிறப்பாக நடத்தி பெருமை பெற்ற தேர்தல் ஆணையம் சில ஆண்டுகளாக தமது தனித் தன்மையை இழந்து வருகிறது. மத்திய பா.ஜ.க.வின் கண் அசைவிற்கு ஏற்றாற் போல் செயல்படுகிற அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறி வருகிறது. இந்தப் பின்னணியில் தான் நரேந்திர மோடி மூலம் அ.இ.அ.தி.மு.க. தலைமை 21 சட்டமன்ற தொகுதி தேர்தல்களையும் நடத்தாமல் ஒத்திப் போடுகிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுவே அ.தி.மு.க., பா.ஜ.க.வோடு கூட்டணிக்கான பேரங்களில் ஒன்றாக பேசப்படுகிறது. அப்படி தேர்தல் நடந்தால் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் பறிபோகிற நிலை ஏற்பட்டு, ஆட்சி பறிபோகும் என்கிற அச்சத்தின் காரணமாக இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் அ.தி.மு.க. ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் மீது குட்கா வழக்கு, ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு ரூபாய் 84 கோடி பணம் கொடுத்த வழக்கு மற்றும் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யாமல் பாதுகாப்பு அரணாக பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில் அ.தி.மு.க.வின் எதிர்காலமே பா.ஜ.க.வின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது.

எனவே, அரசமைப்புச் சட்டப்படி, ஜனநாயக முறைப்படி 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலோடு இணைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் முன்னெடுக்க வேண்டும். இதில் அ.தி.மு.க. தலைமையின் வற்புறுத்தலின் காரணமாக மத்திய பா.ஜ.க. அரசின் நிர்ப்பந்தத்திற்கு தேர்தல் ஆணையம் பணிந்து போகுமேயானால் அதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் அணி திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படுமென எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com