பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தமிழகத்திற்கு அவமதிப்பு: ஸ்டாலின் கண்டனம் 

பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தமிழகத்திற்கு தொடர்ந்து அவமதிப்பு செய்யப்படுவதாக, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தமிழகத்திற்கு அவமதிப்பு: ஸ்டாலின் கண்டனம் 

சென்னை: பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தமிழகத்திற்கு தொடர்ந்து அவமதிப்பு செய்யப்படுவதாக, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திங்களன்று திருவான்மியூரில் நடைபெற்ற திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் அவர்களின் இல்லத் திருமண விழாவில், திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஒன்றை நான் எண்ணிப்பார்க்கின்றேன், இதுபோன்ற திருமணங்களை நாம் நடத்தி வைக்கின்ற போது அதிலும் குறிப்பாக சீர்திருத்த முறையில் சுயமரியாதை உணர்வோடு தமிழ் மொழியில் நடத்தி வைக்கும் நிலையைக்கூட இன்றைக்கு விமர்சனம் செய்யக்கூடிய நிலை உருவாகியிருக்கின்றது.

இன்றைக்கு நடைபெறக்கூடிய இதுபோன்ற திருமணங்கள் சட்டப்படி முறைப்படி செல்லுபடியாகும் என்ற நிலையில் தான் நடந்து கொண்டிருக்கின்றது. அப்படிப்பட்ட திருமண விழாவில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பங்கேற்று மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு நல்ல கூட்டணியை திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் நாம் ஏற்கனவே தோழமை கொண்டு அமைத்திருந்தாலும் அது முறையோடு அங்கீகாரத்தோடு விரைவில் அறிவிப்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி எந்த அளவில் அமைந்திருக்கின்றது என்பதை அறிவிக்க இருக்கின்றோம். ஆனால், அதே நேரத்தில் இன்னொரு கூட்டணி அமைகின்ற நிலையும் நாட்டில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க வைப் பொறுத்தவரைக்கும், யாரோடு கூட்டணி அமைக்கப் போகின்றார்கள் என்ற செய்தி தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. நான் நேற்றைக்குக்கூட ஓசூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் குறிப்பிட்டுச் சொன்னேன். இன்று பத்திரிகைகளில் இந்தச் செய்திகளெல்லாம் வந்திருக்கின்றது. 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து வைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. வைத்துத்தான் தீரவேண்டும். காரணம் 6 மாதத்திற்கு மேல் எந்தத் தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் இருக்கக்கூடாது என்பது சட்டம் விதிமுறை. ஆனால், அதையெல்லாம் காலில் போட்டு மிதித்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தலோடு இந்தத் தேர்தலையும் தடுத்து நிறுத்துவதற்கான சூழ்ச்சிகளை இன்றைக்கு, மோடி தலைமையில் இருக்கக்கூடிய மத்திய அரசு செய்து கொண்டிருக்கின்றது. எனவே, உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றேன். நேற்றைக்குக்கூட பிரதமர் மோடி அவர்கள் திருப்பூருக்கு வந்து தேர்தல் பிரசாரத்திலும், அரசு நிகழ்ச்சியிலும் கலந்துவிட்டு சென்றிருக்கின்றார்.

அரசு நிகழ்ச்சி என்று சொன்னால், சுந்தரனார் அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து துவங்கி அந்த நிகழ்ச்சி முடிந்ததற்குப் பிறகு நாட்டுப்பண், அதாவது தேசிய கீதம் பாடும் முறை தொடர்ந்து இருந்து வந்து கொண்டிருக்கின்றது. ஏற்கனவே, மதுரைக்கு வந்தபோதும், நேற்றைக்கு திருப்பூர் வந்தபோதும் அந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை, என்பது வேதனைக்குரிய ஒன்று. அதேநேரத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்று பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகின்ற பொது தமிழில் பேசுகின்றார். தமிழில் சகோதர, சகோதரிகளே என்று சொல்லுகின்றார். திருவள்ளுவரை மேற்கோள் காட்டி குறளைச் சொல்லி பேசுகின்றார் என்று சொன்னால், மக்களை ஏமாற்றுகின்ற நிலையில் இன்றைக்கு பிரதமர் மோடி அவர்கள் இருந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு சாட்சிகள் தேவையில்லை. ஆகவே, இன்றைக்கு நாட்டில் இருக்கக்கூடிய சூழல்களை எல்லாம் நீங்கள் எண்ணிப்பார்த்து வரக்கூடிய தேர்தலில் ஒரு நல்ல விடிவு காலத்தை தமிழகத்திற்கும், மத்தியிலும் ஏற்படுத்தித் தருவதற்கு நீங்கள் எல்லோரும் துணை நிற்க வேண்டும் என்று உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்வதற்கு கடமைப்பட்டிருக்கின்றேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com