பிளாஸ்டிக் பொருள்களுக்கு கடும் நெருக்கடி: வாழை இலை, பாக்குமட்டை, காகிதப்பை பயன்பாடு அதிகரிப்பு

பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலாகி விட்ட நிலையில் சென்னையில் வாழை இலை, பாக்குமட்டை, காகிதப்பை போன்ற மாற்றுப் பொருள்களின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது.
பிளாஸ்டிக் பொருள்களுக்கு கடும் நெருக்கடி: வாழை இலை, பாக்குமட்டை, காகிதப்பை பயன்பாடு அதிகரிப்பு

பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலாகி விட்ட நிலையில் சென்னையில் வாழை இலை, பாக்குமட்டை, காகிதப்பை போன்ற மாற்றுப் பொருள்களின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது.
 சுற்றுச்சூழல் நலன் கருதி பாலித்தீன் பை உள்ளிட்ட 14 பொருள்களுக்கு தமிழக அரசு கடந்த ஜன.1-ஆம் தேதி முதல் தடை விதித்தது. இதையடுத்து அன்றைய தினம் முதல் தடையை நடைமுறைப்படுத்த அரசின் சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஹோட்டல் உரிமையாளர்கள், மளிகைக்கடை வியாபாரிகள் கள்ளச் சந்தையில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தட்டுகளை வாங்கிப் பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து கள்ளச் சந்தையில் கொண்டுவரப்படும் பிளாஸ்டிக் பொருள்களை மொத்தமாக முடக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டது. இதில் தற்போது குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றிருக்கிறது.
 மாற்றுப் பொருள்களுக்கு பெரும் வரவேற்பு: சென்னையைப் பொருத்தவரை தற்போது பெரும்பாலான உணவகங்கள், தள்ளு வண்டிக் கடைகளில் மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். வாழை இலை, பாக்கு மர இலை, மந்தார இலை, அலுமினியத் தாள், காகிதங்கள், பனை ஓலை பொருள்கள், தாமரை இலை, மரக்கரண்டி, மண்பாண்டம் உள்ளிட்ட மாற்றுப் பொருள்களை வியாபாரிகள் நாட தொடங்கியுள்ளனர்.
 பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்களாக பல்வேறு பொருள்கள் இருந்தாலும் வாழை இலை, பாக்குமட்டை, காகிதப் பை ஆகியவற்றின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. இது குறித்து சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த வியாபாரிகள் கூறியது: கடந்த ஜனவரி இரண்டாவது வாரம் வரை சென்னையின் பிரபல ஹோட்டல்களைச் சேர்ந்த உரிமையாளர்கள் மட்டுமே வாழை இலையை வழக்கத்தை விட கூடுதலாக ஆர்டர் செய்தனர். ஆனால், அதற்குப் பிறகு வாழை இலைக்கான ஆர்டர் அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து வத்தலக்குண்டு, தூத்துக்குடி, திருச்சி, புதுச்சேரி, நெல்லூர், கடப்பா ஆகிய இடங்களிலிருந்து விவசாயிகளிடம் அதிகளவில் வாழை இலைகளை கொள்முதல் செய்து வருகிறோம்.
 தினமும் 10 லாரிகளில்...: கற்பூர வள்ளி, மஞ்சள் வாழை, பச்சை வாழை, ரஸ்தாலி வாழை இலை என தற்போது தினமும் 10 லாரிகளில் இலை விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இதில், 4 ஆயிரம் கட்டு வாழை இலை இருக்கும். ஒரு கட்டில் 200 இலைகள் இருக்கும். இதன் விலை ரூ.200 முதல் ரூ.1,000 வரை உள்ளது. முன்பு 4 லாரிகளில் மட்டுமே வாழை இலை கொண்டுவரப்பட்டது. கடந்த மாதம் வரை வாழை இலை அதிகமாக விற்பனையாகாததால் அவை தேங்கிக்கிடக்கும் நிலைகூட ஏற்படும். ஆனால் தற்போது காலை 11 மணிக்கே விற்றுத் தீர்ந்து விடுகின்றன. கோயம்பேடு சந்தையிலிருந்து சென்னையில் உள்ள தினசரி சந்தைகளுக்கு தினமும் ரூ.40 லட்சம் மதிப்பிலான வாழை இலைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. பெரிய இலைகளை நறுக்கும் போது மிஞ்சும் சின்ன, சின்ன இலைகளைக் கூட சிறிய ஓட்டல் உரிமையாளர்கள் வாங்கிச்சென்று விடுகின்றனர் என்றனர்.
 பாக்குமட்டை விற்பனை: அதேபோன்று சந்தையில் 2 அங்குலம் முதல் 12 அங்குலம் அளவில் வட்டம், சதுர வடிவிலான பாக்கு மட்டை தட்டுகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இப்போது பாக்கு மட்டைகளில் செய்யப்பட்ட ஸ்பூன், 200 மில்லி சூப், டீ கப்புகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பிளாஸ்டிக் தடை காரணமாக பாக்கு மட்டை தட்டுகளின் விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது. உற்பத்தி இடத்தில் ரூ.4-க்கு வாங்கும் 12 அங்குல தட்டு வெளி மார்க்கெட்டில் ரூ.8-க்கு விற்கப்படுகிறது. இந்த விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com