
தனுஷ்கோடியிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற 5 அகதிகள், ஒரு முகவர், ஆட்டோ ஓட்டுநர் என 7 பேரை சுங்கத்துறையினர் திங்கள்கிழமை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் ஒரு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
ராமேசுவரம் சுங்கத்துறையினர் தனுஷ்கோடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரட்டைதாழை முனிஸ்வரர் ஆலயம் அருகே பதிவு எண் இல்லாத ஆட்டோ ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, ஆட்டோக்குள் யாரும் இல்லை. ஆனால் ஆட்கள் நடந்து சென்றதற்கான தடம் இருப்பதை கண்ட அதிகாரிகள் காட்டுப் பகுதிக்குள் சென்று பார்த்தபோது அங்கு ஒரு சிறுவன் உள்பட 7 பேர் இருந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களை ராமேசுவரம் சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்தபோது, இலங்கை கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த கணேஷ் (67), அவரது மனைவி சோமாலை (62), மகள்கள் குமுதினி (31), மலர் (28), பேரன் ஜெகன் (10) ஆகியோர் என்பதும், கடந்த 2007-ஆம் ஆண்டு அகதிகளாக ராமேசுவரம் வந்த அவர்கள் மதுரை ஆனையூர் அகதிகள் முகாமில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. மேலும் குடும்பத்துடன் ராமேசுவரம் வழியாக குறைந்த செலவில் இலங்கை செல்ல திட்டமிட்டிருந்ததும், இதற்காக ராமேசுவரத்தை சேர்ந்த முகவர் ஆனந்தை அணுகியுள்ளனர். அவர் ரூ. 25 ஆயிரம் செலவாகும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் அனைவரையும் ராமநாதபுரத்திற்கு வந்து விடுமாறு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம் வந்த அவர்களை ஆனந்த் ஆட்டோவில் தனுஷ்கோடி பகுதிக்கு அழைத்து வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கணேஷ், சோமாலை, முகவர் ஆனந்த் (39), ஆட்டோ ஓட்டுநர் லோகநாதன்(38) உட்பட 7 பேரையும் தனுஷ்கோடி காவல் நிலையத்தில் சுங்கத்துறையினர் திங்கள்கிழமை ஒப்படைத்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.