
மதுரை விமான நிலையத்துக்கு மீனாட்சியம்மன் பெயரைச் சூட்டக் கோரிய வழக்கில் 6 மாதத்தில் உரிய முடிவெடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த செல்வகுமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனு: மதுரை மிகப் பழைமையான நகரம். மதுரையின் சிறப்பாக மீனாட்சியம்மன் கோயில் உள்ளது.
மதுரையில், பல்வேறு சமூகங்கள், மதங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை விமான நிலையத்துக்கு சாதியத் தலைவர்களின் பெயர்களைச் சூட்டுவதற்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு, அதுதொடர்பாக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு செய்வது ஏற்கத்தக்கதல்ல. எனவே மதுரையின் முக்கிய அடையாளமான மீனாட்சி அம்மன் கோயிலின் பெயரையே, மதுரை விமான நிலையத்துக்குச் சூட்ட உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக 6 மாதங்களுக்குள் பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G