சுடச்சுட

  

  அண்ணா பல்கலை.யில் தமிழ் இணைய மாநாடு: செப்டம்பர் மாதம் நடக்கிறது

  By DIN  |   Published on : 13th February 2019 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பதினெட்டாவது தமிழ் இணைய மாநாடு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 20 முதல் 22-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.
  உத்தமம் நிறுவனமும், அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் இந்த மாநாடு, தானியங்கிக் கருவிகளில் தமிழ்மொழிப் பயன்பாடு என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட இருக்கிறது.
  இதுதொடர்பான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா, உத்தமம் நிறுவனத் தலைவர் சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்.மணியம், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோ ஆகியோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
  உத்தமம்  நிறுவனம் கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் கணினித் தமிழ் ஆய்வு குறித்த மாநாட்டை ஒவ்வொரு  ஆண்டும் நடத்தி வருகிறது. சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, தமிழகம், புதுச்சேரி  ஆகிய பகுதிகளில்  இதுவரை 17 தமிழ் இணைய மாநாடுகளை நடத்தியுள்ளது. இப்போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 18 ஆவது மாநாடு நடத்தப்பட உள்ளது.
  தானியங்கிக் கருவிகளில் தமிழ்மொழிப் பயன்பாடு என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் இந்த மாநாட்டில், தமிழ் கணினி பயன்பாட்டு வன், மென்பொருள்களைக் கொண்டு கண், செவியியல் மாற்றுத்திறனாளிகளுக்கு அன்றாட வாழ்க்கை செயல்பாடுகள், கல்வி, கற்றல், சமூகப் பணிகள் போன்றவற்றில் முழுமையாகப் பங்கேற்க வசதி செய்து தருவதும் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கும்.
  மேலும், தமிழ் கணினி துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து பலர் சிறப்புச் சொற்பொழிவும் ஆற்ற உள்ளனர். ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சமர்ப்பிக்க உள்ளனர். அது மட்டுமின்றி, மாநாட்டு கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் சிறந்த தமிழ் கணினி நிரலுக்கோ அல்லது இணைய பக்கங்களுக்கோ ரூ. 1 லட்சம் சிறப்புப் பரிசும் வழங்கப்படும்.
  கட்டுரைகளை அனுப்ப ஜூன் 1 கடைசி: இந்த மாநாட்டுக்கு கணினி வழி தமிழ் மொழி பகுப்பாய்வு, கணினி வழி மொழிபெயர்ப்பு, கணினி வழி தமிழ் உரையிலிருந்து பேச்சு, தமிழ்மொழி பேச்சு அறிதல், தமிழ் பேச்சுத் தரவகம் மற்றும் இவை தொடர்பான ஆய்வுகள் (குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வகை ஆய்வுகள்), தேடு பொறிகள், உரைப் பகுப்பாய்வு மற்றும் உரைத் தரவுகளை அலசும் ஆய்வுகள், கையடக்கக் கருவிகளில் தமிழ் மற்றும் ஆண்டிராய்டு ஆப்பிள் கருவிகளில் தமிழ், தமிழ்த் திறவு நிரலிகள் மற்றும் தமிழ்ப்படுத்தப்பட்ட பயன்பாட்டு நிரலிகள், கணினி வழி தமிழ்  கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள் உள்ளிட்ட பொருள்களில் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன என்றனர். 
  ஆய்வுக் கட்டுரைகளை https://easychair.org/conferences/?conf=tic2019 என்ற இணையதளம் மூலம் ஜூன் 1 ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tamilinternetconference.org என்ற இணையப் பக்கத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai