சுடச்சுட

  

  அரசு மருத்துவமனையில் நோயாளிகளை தனியார் பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி கமிஷன் பெறுவதாக புகார்

  By DIN  |   Published on : 13th February 2019 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  உபகரணங்கள் பழுதாக உள்ள அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளை தனியார் பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி, அதற்கு கமிஷன் பெறுவதாக புகார் எழுந்துள்ளது குறித்து ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினர்.
  ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் மோர்பண்ணையைச் சேர்ந்த திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் உள்ள மருத்துவமனை கடந்த 15 ஆண்டுகளாகச் செயல்படுகிறது. சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இம்மருத்துவமனையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இங்கு போதிய சிகிச்சை கிடைப்பதில்லை.
  சுனாமி புனரமைப்பு நிதியில் ரூ. 85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மகப்பேறு பிரிவு கட்டடம், பழைய பொருள்களை போட்டு வைக்கும் கிட்டங்கியாக பயன்படுத்தப்படுகிறது. இதனால், உயர்சிகிச்சைக்காக ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. 
  எனவே, கடலாடி மருத்துவமனையில் காலியாகவுள்ள மருத்துவர் மற்றும் செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பவும், எம்ஆர்ஐ, இசிஜி ஸ்கேன் வசதி செய்யவும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிடவேண்டும் எனக்  கூறியிருந்தார்.
  இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோய்களைக் கண்டறிய மற்றும் சிகிச்சைக்காக உள்ள கருவிகள் என்னென்ன? 
  சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, இசிஜி, எக்கோ, டிரெட்மில் சோதனை உள்ளிட்ட வசதிகள், அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர சிகிச்சை வசதி, தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட வசதிகள் அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகளிலும் உள்ளதா? இந்த வசதிகள் இல்லாத அரசு தலைமை மருத்துவமனைகளில் எப்போது இந்த வசதிகள் ஏற்படுத்தப்படும்? எத்தனை மருத்துவமனைகளில், வசதிகள் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் பழுதாகியுள்ளன?
  கருவிகள் பழுதாக உள்ள மருத்துவமனைகளில், நோயாளிகளை தனியார் பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி, தவறான முறையில் கமிஷன் பெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? பழுதான கருவிகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர், மருந்தகப் பணியாளர் மற்றும் நிர்வாகப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதா? அரசு மருத்துவமனை வளாகங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் முறையில் வருகைப்பதிவேடு கடைப்பிடிக்கப்படுகிறதா? அரசு மருத்துவமனைகளில் போதுமான  படுக்கை வசதிகள் உள்ளனவா? குழந்தைகள் கடத்தலைத் தடுக்கும் வகையில் அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆம்புலன்ஸ்களும் செயல்படும் நிலையில் உள்ளனவா? அவை எத்தனை? என்பன போன்ற கேள்விகளை எழுப்பினர். மேலும், இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai