சுடச்சுட

  

  இந்திய தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளிடம் உரிய முறையில் புகார் அளிக்க முடிகிறதா?: உயர்நீதிமன்றம் கேள்வி

  By DIN  |   Published on : 13th February 2019 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Maduraihighcourt1


  இந்திய தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளிடம் உரிய முறையில் புகார் அளிக்க முடிகிறதா? எனக் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், இதுகுறித்து மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை செயலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
  கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செபஸ்டின் பிரிட்டோ, அவினாஷ்  உள்ளிட்ட 4 பேர் இந்தியாவில் இருந்து ரஷியாவுக்கு தனியார் கப்பல் மூலம் எரிவாயு உருளைகளை ஏற்றிச் சென்றனர். ரஷியா அருகே சென்றபோது எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. 
  இதில், அந்தக் கப்பலில் இருந்த பலர் உயிர் தப்பினர். ஆனால், இந்தியர்கள் 4 பேரின் நிலை மட்டும் என்னவென்று தெரியவில்லை என அவர்களை மீட்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
  இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய கடற்பரப்பில் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக விசாரிப்பதற்கான அமைப்பை ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? கடற்பரப்பில் ஏற்படும் விபத்தில் ஏற்படும் காயம், உயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதா? வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு? நாடு வாரியாக பணியாற்றும் எண்ணிக்கை எவ்வளவு? கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாடுகளில் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? அவர்களின் சடலங்கள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டதா? இந்தியாவுக்குத் திரும்ப இயலாமல் பிற நாடுகளில் தவித்து வரும் இந்தியர்கள் எத்தனை பேர்? அவர்களில் எத்தனை பேருக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? வெளிநாட்டுச் சிறைகளிலிருக்கும் இந்தியர்கள் எத்தனை பேர்? வெளிநாடுகளில் தொழிலாளர்களாக செல்லும் இந்தியர்கள் கைது செய்யப்படுவதற்கான காரணங்கள் என்ன? வெளிநாடுகளில் இருப்போருக்கான சட்ட உதவிகள் இந்திய அரசால் வழங்கப்படுகிறதா? வெளிநாடுகளில் பணியாற்றும் பெண்கள் உழைப்புச் சுரண்டல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவதாக புகார் எழும் நிலையில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன? இதுகுறித்து எத்தனை வழக்குகள்  நிலுவையில் உள்ளன? கடந்த 10 ஆண்டுகளில்  எத்தனைப் புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் எத்தனை வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளிடம் உரிய முறையில் புகார் அளிக்க முடிகிறதா? இந்தியப் பணியாளர்கள் பலவேறு நாடுகளில் பணிபுரியும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் புகார் அளிக்க சென்றால் மொழிப் பிரச்னை ஏற்படுகிறதா? கடந்த 10 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பணியாளர்களால் இந்தியாவுக்கு எவ்வளவு வருமானம் வந்துள்ளது? வெளிநாடுகளுக்கு சட்டவிரோத குடியேற்றத்தை  தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? என கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள், இதுகுறித்து மத்திய உள்துறை செயலர், வெளியுறவுத் துறை செயலர் மற்றும் கப்பல் போக்குவரத்து துறைத் தலைவர் ஆகியோரை சம்பவம் குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, மார்ச் 4-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். மேலும், காணாமல் போன 4 பேரை மீட்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிப். 14-இல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai