சுடச்சுட

  

  உத்தனப்பள்ளியில் எருது விடும் விழா: 2 காளைகள் சாவு,  40 பேர் படுகாயம்

  By DIN  |   Published on : 13th February 2019 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  உத்தனப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எருது விடும் விழாவில் பசு மாடு மற்றும் 2 காளைகள் இறந்தன.  போட்டியில் பங்கேற்ற 40 பேர் காயம் அடைந்தனர்.
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில், செவ்வாய்க்கிழமை  உத்தனப்பள்ளியில் எருது விடும் விழா நடைபெற்றது.  இதற்காக ராயக்கோட்டை, சூளகிரி, உத்தனப்பள்ளி, ஒசூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 300- க்கும் மேற்பட்ட காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்தனர். 
   இதையடுத்து, எருதுவிடும் விழாவில் காளைகள் ஓட விடப்பட்டன.  சீறிப் பாய்ந்து ஓடிய காளைகளை அடக்கி,  அதன் கொம்பில் கட்டியிருந்த வண்ணப் பதாகைகளைப் பறிக்கும் வகையில் இளைஞர்கள் துள்ளிக் குதித்தபடி ஓடினர்.  இதில் காளைகள் முட்டியதில் வெங்கட்ராமய்யா, ராமய்யா, கிருஷ்ணப்பா, கிருஷ்ணகுமார், ஆனந்த் உள்பட 40 பேர் காயம் அடைந்தனர். இதில் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.  அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். 
  காளைகள் உயிரிழப்பு...
  இந்த நிலையில் எருது விடும் விழாவில் ராயக்கோட்டை கீழ் தெருவைச் சேர்ந்த எல்லப்பன் என்பவரின் பசு ஓடவிடப்பட்டது. அப்போது காலில் கயிறு இறுக்கி கீழே விழுந்து அந்த பசு இறந்தது. 
  மேலும்,  சூளகிரி அருகே உள்ள சக்கார்லு பகுதியைச் சேர்ந்த பசவராஜ் (30) என்பவரின் காளை ஆக்ரோஷமாக ஓடிய போது எதிரில் வந்த மற்றொரு காளையோடு பயங்கரமாக மோதியது. இதில் பசவராஜின் காளை படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே இறந்தது.
  இதில் படுகாயமடைந்த மற்றொரு காளையை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். இதையடுத்து, அந்த காளையும் இறந்தது. இறந்த காளைகளுக்கு மாலைகள் அணிவித்து அடக்கம் செய்தனர்.
  இந்த எருது விடும் விழாவைக் காண உத்தனப்பள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருந்தனர்.  இதையொட்டி, உத்தனப்பள்ளி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  இந்தப் போட்டியில் பங்கேற்ற 40 இளைஞர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai