சுடச்சுட

  

  கடன் தள்ளுபடியை விவசாயிகளே கோரவில்லை: திமுகவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

  By DIN  |   Published on : 13th February 2019 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  கடன் தள்ளுபடியை விவசாயிகளே கோரவில்லை என்று திமுக உறுப்பினர் க.பொன்முடிக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
  சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் க.பொன்முடி செவ்வாய்க்கிழமை பங்கேற்றுப் பேசினார். அப்போது நடந்த விவாதம்:-
  க.பொன்முடி: தமிழகத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் கூட்டுறவுக் கடன்கள் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் அனைவருக்கும் கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை.
  அமைச்சர் செல்லூர் ராஜூ: அதிமுக ஆட்சிக் காலத்தில் நீங்கள் (திமுக) விட்டுச் சென்ற நபர்களுக்கும் நாங்கள் கடன்களை தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ்களை அளித்தோம். நீங்கள் கடன்களை தள்ளுபடி செய்யும்போது அதற்கான சான்றிதழ்களை அளிக்கவில்லை.
  கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இப்போது வரையில் 85.42 சதவீதம் அளவுக்கு விவசாயிகள் கடன்களை திருப்பிச் செலுத்தியுள்ளனர். கடன்களைப் பெற்றுள்ள விவசாயிகளில் 83 சதவீதம் பேர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென கேட்கவில்லை. விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யக் கோரவில்லை. 
  தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களை ரத்து செய்ய வேண்டுமென்பதே பெருவாரியான விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
  எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்களை நாங்களே சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு எடுத்துச் சென்றோம்.
  அமைச்சர் ராஜூ: வறட்சி போன்ற காரணங்களால் பாதித்த விவசாயிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என அறிவித்து அதனை ரத்து செய்தோம்.
  எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்: திமுக ஆட்சிக் காலத்தில் ரத்து செய்தது ரூ.7 ஆயிரம் கோடியா இல்லையா என்பது பிரச்னை அல்ல. கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதா இல்லையா, சான்று அளித்தோமா இல்லையா என்பதுதான் முக்கியம்.
  முதல்வர் பழனிசாமி: திமுக ஆட்சிக் காலத்தில் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.7 ஆயிரம் கோடி அல்ல. அறிவித்தை தொகையை விட குறைவாகவே தள்ளுபடி செய்தீர்கள். விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியில் ஏதும் செய்யவில்லை என்கிறீர்கள். வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் நிவாரண உதவிகளை அளித்து வருகிறோம் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai