சுடச்சுட

  

  காட்டுப் பன்றிகளை இதுவரை சுடவில்லை!: அமைச்சர் பதிலால் அவையில் சிரிப்பலை

  By DIN  |   Published on : 13th February 2019 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பன்றிகளை சுடுகின்ற வேலைகள் இதுவரை வனத் துறைக்கு வாய்க்கவில்லை என்று அந்தத் துறையின் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார். 
  அமைச்சரின் இந்த பதிலால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
  சட்டப்பேரவையில் வனத் துறை தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. ப.கார்த்திகேயன் (வேலூர்) எழுப்பிய பிரதான வினாவைத் தொடர்ந்து, பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி துணைக் கேள்வி எழுப்பினார். அப்போது நடந்த விவாதம்:-
  சின்னத்தம்பி யானை குறித்து தொடர்ந்து செய்திகள் வருகின்றன. அந்த யானையின் நிலை என்ன. மேலும், விளை நிலங்களை அழிக்கும் காட்டுப் பன்றிகளை சுட உத்தரவிடப்பட்டிருப்பதாக அமைச்சர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதுவரை எத்தனை பன்றிகள் சுடப்பட்டுள்ளன என்றார்.
  இதற்கு, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அளித்த பதில்:-
  இப்போது தினசரி கதாநாயகன் சின்னத்தம்பி யானைதான். அது இன்றைக்கு எங்கே போகிறது. எங்கே வருகிறது என்பதையெல்லாம் தொலைக்காட்சிகளில் சொல்கிறார்கள். 
  அதில், ஒன்றும் ரகசியம் இல்லை. ஆனால், இந்தப் பிரச்னை குறித்து உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட உள்ளது. எனவே, அதற்காக எதிர்பார்த்து இருக்கிறோம். சின்னத்தம்பி யானையைப் பிடித்து காட்டுக்குள் விடுவதுதான் கடைசி நிலை.
  எந்த மிருகத்தையும் துன்புறுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு இல்லை. மக்களுக்கு பொருந்தாத மிருகங்களிடம் இருந்து மக்களைக் காப்பதுதான் அரசின் கடமை. அதன்படி, காட்டுப் பன்றிகளை சுட்டுப் பிடிப்பதற்கு உரிய உத்தரவை முதல்வர் ஏற்கெனவே பிறப்பித்து இருந்தார். அதன்படி, இதுவரையில் பாதுகாப்பு கேட்டோருக்கு கொடுத்துள்ளோம். ஆனால், சுடுகின்ற வேலைகள் எங்களுக்கு இன்னும் வாய்க்கவில்லை. அப்படி வந்தால் தகவலைத் தெரிவிப்போம் என்றார். அமைச்சரின் இந்த பதிலால் பேரவையில் சிரிப்பலை
  எழுந்தது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai