சுடச்சுட

  

  கோயில் நிலங்களை மீட்பதில் அறநிலையத் துறை செயல்பாடுகள் திருப்தியாக இல்லை: உயர்நீதிமன்றம்

  By DIN  |   Published on : 13th February 2019 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  madurai-high court


  ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்பதற்கான இந்து அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.
  சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை மாவட்டம், பரவையில் அமைந்துள்ள அருள்மிகு வடக்குவாசல் செல்லியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை மீட்கக் கோரி கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. 
  எனவே, இக்கோயிலுக்குப் பாத்தியப்பட்ட அனைத்து இடங்களையும், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு, கோயில்  நிர்வாகத்திடம் ஒப்படைக்கவேண்டும் எனக் கூறியிருந்தார்.
  இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,  
  செல்லியம்மன் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடம் இருந்து மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்பதற்கான இந்து அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை எனத் தெரிவித்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக இந்து அறநிலையத் துறை ஆணையர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.  
  தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு இடங்களை தானமாக வழங்கியோர் பட்டியல் மற்றும் சொத்து விவரங்கள் மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும்  உறுதிப்படுத்த வேண்டும். 
  இதுதொடர்பாக, வருவாய்த் துறை செயலர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தவேண்டும்  எனவும், இதுதொடர்பாக வருவாய்த் துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் வழக்கை பிப். 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai